கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஒருமித்தக் கருத்து தேவை என சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.
14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றியடையும் பட்சத்தில், தன்னைப் பிரதமராகும் படி தனது ஆதரவாளர்கள் வற்புறுத்த வாய்ப்பு உள்ளது என்றும், அப்படி வற்புறுத்தும் பட்சத்தில் பிரதமராவது குறித்துப் பரிசீலனை செய்வதாகவும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வழக்கு விசாரணை ஒன்றிற்காக ஷா ஆலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அன்வாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இது அவர் மட்டும் எடுக்கக் கூடிய முடிவு அல்ல, ஹராப்பான் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அன்வார் தெரிவித்திருக்கிறார்.
மேலும், “மக்கள் தன்னார்வலர்களை பிரதமராக ஏற்கமாட்டார்கள். அதற்கு ஒருமித்த கருத்துத் தேவை” என்றும் அன்வார் கூறியிருக்கிறார்.