கூச்சிங் – மலேசிய சுற்றுலா வாரியத்திலிருந்து தங்களது பிரதிநிதியை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டது சரவாக் மாநிலம்.
இது குறித்து சரவாக் முதலமைச்சர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மலேசிய சுற்றுலா வாரியத்தில் தமது பிரதிநியை வைத்திருப்பதை மாநில அரசாங்கம் தேவையற்றதாகக் கருதுகிறது. காரணம் அதே பணியை தான் சரவாக் சுற்றுலா விளம்பர வாரியம் செய்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், தமது பிரதிநிதியை திரும்பப் பெறுவதில் வேறு எதுவும் காரணம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
இதனிடையே, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சுற்றுலா வரி அமலுக்கு வருவதாக மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, சரவாக் சுற்றுலா, கலை, கலாச்சார, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்சா, நஸ்ரிக்கு எழுதிய கடிதத்தில், சபா, சரவாக்கில் வரும் ஜூலை 1-ம் தேதி சுற்றுலா வரி அமல்படுத்துவதை ஒத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
கூட்டரசு அரசாங்கம், மலேசிய ஒப்பந்தம் 1963-க்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அப்துல் கரிம் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அப்துல் கரிமுக்குப் பதிலளித்த நஸ்ரி, அவருடைய கருத்து அனுபவமற்றதாக இருப்பதாகவும், ‘குண்டர் கும்பல்’ போல் நடந்து கொள்ளாதீர்கள் என்றும் கடிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.