புத்ரா ஜெயா – ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ இசா சமாட் மற்றும் அவரது மனைவி பீபி ஷர்லிசா முகமட் காலிட் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை முடுக்கி விட்டிருக்கின்றது.
இசா முகமட்டும், அவரது மனைவியும் நாளை புதன்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். தங்களின் வாக்குமூலத்தை அவர்கள் வழங்குவார்கள்.
பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் முன்னாள் தலைவரும், மலேசிய நன்னெறி மையத்தின் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ சுலைமான் மாஹ்புப் இசா சமாட்டுக்குப் பதிலாக பெல்டா குளோபல் வெஞ்சர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவராக இடைக்காலத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தனது சொந்த காரணங்களுக்காக இசா முகமட் தானாகவே தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் என பிரதமர் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தரைப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராக இசா சமாட்டை நியமிப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார். இந்த நியமனத்திற்கும் பல தரப்புகள் தங்களின் கடுமையான கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்திருக்கின்றன.