புருசல்ஸ் – பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசல்சில் உள்ளூர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் (மலேசிய நேரம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணி) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தத் தற்கொலைக் தாக்குதல்காரன் பெல்ஜியம் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
நகரின் மையப்பகுதியில் உள்ள மத்திய இரயில் நிலையத்தில் அந்தத் தாக்குதல்காரன் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரோந்து வந்து கொண்டிருந்த இராணுவப் படையினர் அவனைச் சுட்டுக் கொன்றனர். அவனது அடையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இரயில் நிலையத்தில் அவன் சுட்டுக் கொல்லப்பட்டவுடன், அந்த இரயில் நிலையம் வெடிகுண்டு அகற்றும் படையினரால் சோதிக்கப்பட்டு, பாதுகாப்பானதாக அறிவிக்கப்பட்டது.
ரினாசன்ஸ் டவுன் ஸ்குவேர் என்ற சுற்றுப் பயணிகள் கூடும் மையத்தில், அனைவரும் கோடை கால இரவு வேளையை இரசித்துக் கொண்டிருந்த தருணத்தில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து அதன் சுற்று வட்டச் சாலைகளில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
வரிசையாக ஐரோப்பிய நகர்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது ஐரோப்பிய மண்டலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.