கோலாலம்பூர் – அண்மையில் சமூக ஊடகங்களில் சர்ச்சையாகிப் பரவலாகப் பகிரப்பட்ட செய்தியொன்றில் செபராங் பிறை போலிடெக்னிக்கில் இந்திய உணவு குத்தகையாளர் நீக்கப்பட்டது இன ரீதியான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த குத்தகை இரத்து இன ரீதியானது அல்ல என்றும் நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இதுவரை இதுபோன்று 4 குத்தகையாளர்களின் குத்தகைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற இன ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்து மிகுந்த அக்கறையும் கவனமும் கொண்டிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இதுகுறித்து ஆழமாகவும், விரிவாகவும் விசாரித்து இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இதுபோன்று இன ரீதி அடிப்படையில் குத்தகைகள் இரத்து செய்யப்பட்டது உண்மை என்றால் மஇகா அதனை ஏற்றுக் கொள்ளாது என்றும் அதனை எதிர்த்துப் போராடும் என்றும் கமலநாதன் மேலும் கூறினார்.
“சம்பந்தப்பட்ட செபராங் பிறை போலிடெக்னிக் இயக்குநரை இதுகுறித்து நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் உறுதி செய்துள்ளபடி குத்தகை நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றாத 4 குத்தகையாளர்களின் குத்தகைகள் இதுவரை இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களில் மூவர் மலாய்க்காரர்கள் என்றும் ஒருவர் இந்தியர் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்” என்றும் கமலநாதன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே வேளையில் அந்த போலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கல்லூரி இயக்குநர் அறிந்திருக்கிறார் என்றும் அதனைத் தீர்ப்பதற்கு அவர் உறுதியளித்திருக்கின்றார் என்றும் கமலநாதன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
உயர்கல்வி அமைச்சுடனும் செபராங் பிறை போலிடெக்டனிக்கின் இயக்குநருடனும் மஇகா இந்த விவகாரம் குறித்து அணுக்கமாகக் கண்காணித்துப் பணியாற்றி வரும் என்றும் விரைவில் இதற்கான தீர்வு காணப்படுவதை உறுதி செய்யும் என்றும் கமலநாதன் உறுதியளித்திருக்கிறார்.