Home கலை உலகம் மக்கள் மனதை வென்றுவிட்ட ஓவியா – பலமும், பலவீனமும்!

மக்கள் மனதை வென்றுவிட்ட ஓவியா – பலமும், பலவீனமும்!

599
0
SHARE

Oviyabigbossசென்னை – பிக்பாஸ் வீட்டின் முதல்நாள் அரைகுறை ஆடையுடன் பார்க்க கவர்ச்சியாக நுழைந்த போது, யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இந்தப் பெண்ணுக்குள் இத்தனை நற்பண்புகள் இருக்கிறதென்று. ஏன்? பிக்பாசே எதிர்பார்த்திருக்கமாட்டார்.

முதல்நாள் இரவில் தூங்காமல் கேமராவுடன் பேசிக் கொண்டு, பசிக்குது வாழைப்பழம் கொடுங்க என்று கெஞ்சிய போது, நிகழ்ச்சியில் இந்தப் பொண்ணு தான் காமெடிப் பீசாக இருக்கப் போகிறது என்ற எண்ணம் வந்தது. அடுத்த சில நாட்களில் வாழைப்பழம் மீம்ஸ்களாக இணையத்தை வலம் வந்தார்.

முதல் வாரத்தில் சினேகன் தலைவராகி, கொஞ்சம் கெத்து காட்டிய போது, மற்ற போட்டியாளர்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு அவருக்கு இணங்கிப் போக, ‘நான் நானாகத் தான் இருப்பேன்’ என்று முதல் ஆளாக சினேகனுக்கு அடங்க மறுத்தது ஓவியா தான். எல்லோரையும் கிண்டல் செய்து கொண்டு அப்பாவிப் போர்வையில் சுற்றிக் கொண்டிருந்த கஞ்சா கருப்பு, ஓவியாவை அடங்கிப் போகச் சொல்ல, “நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்று ஓரே வார்த்தையில் அவரை அடக்கி உட்கார வைத்தார்.

oviya biggbosstamilஅந்த ஒரு வார்த்தை ஓவியாவை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. தொடர்ந்து, ஹவுஸ்மேட்சுகளால், முதல் முதலாக ஒதுக்கப்பட்ட ஜூலி, இரண்டாவதாக ஒதுக்கப்பட்ட பரணி ஆகியோருக்கு அருகே சென்று துணிச்சலுடன் ஆறுதல் கூறினார்.

அங்கே தான் அவருக்கும், மற்ற ஹவுஸ்மேட்சுகளுக்கும் இடையில் லேசான விரிசல் ஏற்படத் தொடங்கியது. காலையில் சிறு குழந்தையென துள்ளிக் குதிக்கும் நடனம், வெளிப்படையான பேச்சு, புறம் பேசாத தன்மை, சின்னச் சின்ன விசயங்களைக் கூட ரசிக்கும் தன்மை என சேற்றுக்குள் முளைத்த செந்தாமரையாக மற்ற ஹவுஸ்மேட்சுகளில் ஓவியாவின் குணம் ரசிகர்களை வெகுவாகக் கவரத் தொடங்கியது.

அதனால் தான் ஒவ்வொரு முறை எலிமினேசனில் சிக்கும் போதும் ரசிகர்கள் அவருக்குத் தங்களின் பேராதரவைத் தந்து மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.

ஓவியா ஆர்மி

Juliebigboss
மற்ற ஹவுஸ்மேட்சுகளின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்க ஓவியாவின் குணம் மட்டும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கத் தொடங்கியது. ஏன்? பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கே பிடிக்கத் தொடங்கியது.

அதன் காரணமாக, ரசிகர்கள் மத்தியில் ‘ஓவியா ஆர்மி’ என்ற ஹேஷ்டேக் மிகப் பிரபலமாக மாறத் தொடங்கியது. ஒவ்வொரு முறை மக்கள் உங்களைக் காப்பாற்றிவிட்டார்கள் என்று கமல் அறிவிக்கும் போதெல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த கரவொலி, மற்ற ஹவுஸ்மேட்சுகளுக்கு வயிற்றெரிச்சலைக் கிளப்பியது.

அதனாலேயே காயத்ரி, ஜூலிக்கு தனது ஆதரவைக் கொடுக்கத் தொடங்கினார். ஜூலியைத் தனது அடிமையாகவே மாற்றி ஓவியாவுக்கு எதிராகத் திருப்பினார். பொறாமையால் சக்தி ஓவியாவை அடிக்கவே கை ஓங்கினார்.

அதிகாரத்திற்கு அடங்க மறுத்தவள் காதலில் சறுக்கினாள்

BigbossOviyaஎன்ன தான் ஓவியா துணிச்சலான பெண்ணாக இருந்தாலும், இளம் வயது காரணமாக அன்புக்காக ஏங்கினார். “யாராவது என் மேல அன்பு காட்டினா” என்று கன்பெசன் அறையில் அவர் அழுத போதே அவரின் ஆழ்மனதில் இருக்கும் ஏக்கம் வெளிப்பட்டது.

ஆரவ் மீது ஓவியா கொஞ்சம் கொஞ்சமாக அன்பை அதிகரிக்கத் தொடங்கினார். முதலில் ஆரவிற்கும் ஓவியா மீது அன்பு இருந்தது. அதை அவர் பல இடங்களில் வெளிப்படுத்தினார். ஆனால், ஆரவ் தான் ஓவியாவின் பலவீனம் என்பதைப் புரிந்து கொண்ட காயத்ரி மிக அழகாக விளையாடி, ஆரவை மூளைச் சலவை செய்து ஓவியாவிடமிருந்து விலக்கினார். அதேநேரத்தில் ஓவியாவை வெறுப்பேற்ற ஜூலியை ஆரவுடன் நெருக்கமாக்க முயற்சி செய்தார்.

ஆம்.. காயத்ரியின் திட்டம் மிகச் சரியாக நடந்தது. மனதளவில் பலமாக இருந்த ஓவியா, கடந்த வாரம் முழுவதும் காதலால் சறுக்கத் தொடங்கினார். அதனாலேயே ஆரவிடம் அதிக அன்பைக் காட்ட முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் அவமானமடைந்தார். இறுதியாக மிக மோசமான மனக்குழப்பத்திற்கு உள்ளாகி நேற்று நீச்சல் குளத்தில் மூழ்க முயற்சி செய்யும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் மாறிப் போயின.

ஓவியா மன உளைச்சல் காரணமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகத் தற்போது தகவல்கள் உலா வருகின்றன.

எது எப்படியோ, பிக்பாஸ் வெற்றியை விட, இந்த 40 நாட்களில் ஓவியா கோடிக்கணக்கான மக்கள் மனதை வென்றுவிட்டார். இந்த நல்ல பெயருடனேயே அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

அவ்வளவு பிரபலமில்லாத நடிகையாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தற்போது முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இணையான ரசிகர்களோடு இருக்கும் ஓவியா, ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார் பாஸ்.

-செல்லியல் தொகுப்பு

 

Comments