புத்ராஜெயா – பெல்டா முதலீட்டு கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் தங்கும்விடுதிகள் வாங்கிய விவகாரத்தில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இஷா அப்துல் சமட் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் சுமார் 2 மணி நேர விசாரணை செய்யப்பட்ட இஷா சமட், பின்னர் 4.24 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
லண்டன் மற்றும் கூச்சிங்கில் தங்கும்விடுதிகள் வாங்கிய விவகாரத்தில், முன்னாள் பெல்டா தலைவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் இஷா சமட்டும் ஒருவர்.
லண்டன் கென்சிங்டன் பகுதியில் வாங்கிய தங்கும்விடுதி 330 மில்லியன் ரிங்கிட் என்றும், கூச்சிங்கில் வாங்கிய தங்கும்விடுதி 160 மில்லியன் ரிங்கிட் என்றும் பெல்டா முதலீட்டு கூட்டுறவு நிறுவனத்தால், கணக்குக் காட்டப்பட்ட நிலையில், லண்டன் தங்கும்விடுதி 110 மில்லியன் ரிங்கிட், கூச்சிங் தங்கும்விடுதி 30 மில்லியன் ரிங்கிட் தான் என்பது தெரியவந்திருக்கிறது.