கோலாலம்பூர் – தான் இஸ்லாமிய ஜிகாத்திற்கு ஆதரவாகச் செயல்படவில்லை என இந்தியாவால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், இண்டர்போலிற்குக் கடிதம் வாயிலாகப் பதிலளித்திருக்கிறார்.
தான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறு பழி சுமத்தப்படுவதாகவும் ஜாகிர் நாயக் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த மே மாதம் இந்திய அரசு, அனைத்துலகப் போலீசுக்கு (இண்டர்போல்) கடிதம் எழுதியது. அதில் தாங்கள் தேடி வரும் ஜாகிர் நாயக், அனைத்துலகக் குற்றவாளி என்றும், அவரை எந்த நாட்டுக் காவல்துறையும் கைது செய்யலாம் என்கிற அடிப்படையில், சிவப்பு அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
இந்தியாவைச் சேர்ந்த ஜாகிர் நாயக், தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தார் என்றும், 2016-ம் ஆண்டு வங்காள தேசம், தாக்காவில் நடந்த தாக்குதலுக்கு ஜாகிரின் பேச்சு தான் காரணம் என்றும் இந்தியா குற்றம் சாட்டியது.
அதனையடுத்து இந்தியாவில் இருந்து வெளியேறிய ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்றதோடு, இஸ்லாம் நாடுகள் பலவற்றில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.