Home நாடு பிகேஆர் கட்சியிலிருந்து மாணிக்கவாசகம் நீக்கப்பட்டார்!

பிகேஆர் கட்சியிலிருந்து மாணிக்கவாசகம் நீக்கப்பட்டார்!

945
0
SHARE
Ad

S-Manikavasagam-pkrபெட்டாலிங் ஜெயா – முன்னாள் காப்பார் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான எஸ்.மாணிக்கவாசகம், கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் குறித்து தரக் குறைவாகப் பேசியதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்த முடிவை எடுத்திருப்பதாக தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்திருப்பதாக, தொடர்பு இயக்குநர் பாமி பாட்சில் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த 14 நாட்களுக்குள்ளாக இந்த முடிவை எதிர்த்து மாணிக்கவாசகம் மேல்முறையீடு செய்யலாம்.

#TamilSchoolmychoice

“அன்வாரைத் தரக் குறைவாகப் பேசவில்லை”

anwar-ibrahimஇதற்கிடையில் 4 மாதங்களுக்கு முன்பாக, தான் அன்வாரைத் தரக் குறைவாகப் பேசியதாக எழுந்துள்ள புகாரில் உண்மையில்லை என்று மாணிக்கவாசகம் மறுத்திருப்பதாக பிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளம் தெரிவித்தது.

அன்வாரைப் பற்றி தான் கூறியதாகக் கூறப்படும் கருத்துகளைத் தான் மறுத்திருப்பதாகவும், அதுகுறித்து காவல்துறையில் புகார் ஒன்றை செய்திருப்பதாகவும் மாணிக்கவாசகம் தெரிவித்திருக்கிறார்.

எப்போதுமே அன்வாரைப் பற்றித் தான் தரக் குறைவாகப் பேசியதில்லை என்றும் மாணிக்கவாசகம் கூறியிருக்கிறார். தன்னைத் தற்காக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்குத் தான் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் மாணிக்கவாசகம் தெரிவித்திருக்கிறார்.

கட்சியில் தனது நிலைமை குறித்து பின்னர் முடிவெடுக்கப் போவதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

மாணிக்கவாசகத்தின் அரசியல் வளர்ச்சி

அன்வார் அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் பிகேஆர் கட்சியில் இணைந்து, அவருக்கு ஆதரவாக அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மாணிக்கவாசகம், 2008-இல் காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றதன் மூலம் அரசியல் வெளிச்சத்துக்கு வந்தார்.

இருப்பினும் 2013-இல் அவருக்கு காப்பார் தொகுதி மீண்டும் வழங்கப்படவில்லை. மாறாக கோலசிலாங்கூரிலுள்ள புக்கிட் மெலாவாத்தி சட்டமன்றத் தொகுதி அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் 2013 பொதுத் தேர்தலில் 806 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கவாசகம் அம்னோ வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

khalidibrahim12014-ஆம் ஆண்டில் நடந்த பிகேஆர் கட்சித் தேர்தலில், தற்போதைய மந்திரி பெசாரும் கட்சியின் துணைத் தலைவருமான அஸ்மின் அலிக்கு ஆதரவாகச் செயல்பட்ட மாணிக்கவாசகம், கோலசிலாங்கூர் தொகுதி பிகேஆர் தலைவருக்கான போட்டியில் அப்போதைய மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமைத் (படம்) தோற்கடித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

டான்ஸ்ரீ காலிட் நாளடைவில் தனது மந்திரி பெசார் பதவியை இழப்பதற்கும் அந்தத் தேர்தல் தோல்வி ஒரு காரணமாக அமைந்தது.

தற்போது கோலசிலாங்கூர் பிகேஆர் தொகுதியின் தலைவராகவும் மாணிக்கவாசகம் பணியாற்றி வருகிறார்.