ஷா ஆலம், ஜூன் 12 – அண்மையில் நடந்த பிகேஆர் உட்கட்சித் தேர்தலின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் பண அரசியல் செய்தார் என முன்னாள் காப்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.மாணிக்கவாசகம் பொதுவில் குற்றம்சாட்டியதால் பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாணிக்கவாசகத்திற்கு காரணம் கோரும் கடிதம் வழங்கப்பட்டது. அதற்கு அவர் சரியான காரணங்களை சொல்லி பதில் வழங்கியதால் அவருடைய காரணத்தை ஏற்றுக் கொண்டு அவரது இடைநீக்கத்தை மீட்டுக் கொள்வதாக பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
மாணிக்கவாசகத்தின் விளக்கத்தை பிகேஆர் ஏற்றுக் கொண்டதுடன் அவரது இடைநீக்கம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா நேற்று முன்தினம் அறிவித்தார்.
கடந்த மே மாதத்தில் நடந்த கோலசிலாங்கூர் தொகுதியில் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார் என்று முக்கிய ஊடகம் ஒன்றுக்கு மாணிக்கவாசகம் பேட்டியளித்தார் என்றும், கட்சியின் கொள்கைகளை அவர் மீறியது குற்றம் என்றும் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.