சுபாங் ஜெயா – சுபாங் ஜெயாவிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் லான்ஸ் காப்பரல் அந்தஸ்து கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
29 வயதுடைய அந்த அதிகாரி வாலண்டினோ மெசா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். பிங்கிரான் சுபாங் ஜெயா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை 3.25 மணியளவில் தனியாளாக பணியில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு இந்த கொடூரமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தெரிவித்த சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர், காவல் துறையினர் அந்தக் காவல் நிலையத்துக்கு வந்தபோது அந்த நிலையம் இருளில் மூழ்கியிருந்ததாகவும், வாலண்டினோ, சுடப்பட்டு, தலையின் பின்புறம் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார் என்றும் தெரிவித்தார்.
அதிகாலை 2.40 மணியளவில் வெடிச் சத்தங்களைக் கேட்டதாகவும் ஆனால் அவை சுதந்திர தின வாண வேடிக்கையாக இருக்கும் என நினைத்ததாகவும் பல சாட்சிகள் காவல் துறையினரிடம் தெரிவித்திருக்கின்றனர். எனவே, ஏறத்தாழ அந்த நேரத்தில்தான் கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இறந்து கிடந்த வாலண்டினோவின் துப்பாக்கியும் காணப்படவில்லை. அந்தக் காவல் நிலையத்தில் காணொளி படப்பிடிப்பு கருவிகள் (சிசிடிவி) பொருத்தப்படவில்லை என்பதால், சுற்று வட்டாரத்திலிருக்கும் படப்பிடிப்பு கருவிகளைக் கொண்டு காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கலாம் என்றும் காவல் துறையினர் நம்புகின்றனர்.
இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் சூளுரைத்துள்ளார்.