Home கலை உலகம் திரைவிமர்சனம்: மகளிர் மட்டும் – அருமையான படம்.. பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் தான்..

திரைவிமர்சனம்: மகளிர் மட்டும் – அருமையான படம்.. பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் தான்..

1642
0
SHARE
Ad

MM1கோலாலம்பூர் – பெண்ணடிமைத்தனம் பற்றிப் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்த கேள்விகளின் விளைவாக இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் சுயமரியாதையோடு, சுதந்திரமாக வாழ்கிறார்கள். பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராகச் சாதிக்கிறார்கள்.

ஆனால், இந்த மாற்றம் யாருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது? என்றால், இப்போதைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு மட்டுமே.

இதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் இன்னும் சமையலறையே கதி என்றும், குடிகாரக் கணவன்களுக்குப் பணிவிடை செய்வதே வாழ்க்கை என்றும்  இன்னும் அதே நிலையிலேயே தானே இருக்கிறார்கள்?

#TamilSchoolmychoice

அவர்களுக்கும் ஒரு ஓய்வு வேண்டாமா? மகிழ்ச்சி வேண்டாமா? என கேள்வி கேட்கும் படம் தான், நடிகர் சூர்யா தயாரிப்பில், பிரம்மா இயக்கத்தில், ஜோதிகா, ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கும், ‘மகளிர் மட்டும்’.

கதை

MM3டியூசன் டீச்சரான ஊர்வசிக்கு ஒரே மகன். அவரும் வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவரைத் திருமணம் செய்யப் போகும் ஆவணப்பட இயக்குநர் பிரபாவதி தான் ஜோதிகா. ஊர்வசியுடன் தங்கியிருந்து அவரை நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்.

இந்நிலையில், ஊர்வசி தனது பால்ய வயதில் கல்லூரியில் தன்னுடன் ஒன்றாகப் படித்த ராணி (பானுப்பிரியா), சுப்பு (சரண்யா) குறித்து ஜோதிகாவிடம் கூறுகிறார். அவர்களைப் பேஸ்புக்கில் தேடிக் கண்டுபிடிக்கும் ஜோதிகா, இந்த மூன்று பேரையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

MM4ஆனால், பானுப்பிரியாவும், சரண்யாவும் ஒருநாள் கூட குடும்பத்தைவிட்டுப் பிரிய முடியாத படி கடமைகளால் சிறைபட்டு இருக்கிறார்கள் என்பது ஜோதிகாவுக்குத் தெரிய வருகின்றது.

என்றாலும், விடாப்பிடியாக, அம்மூன்று பேரையும் ஒன்றாக இணைக்க முயற்சி செய்கிறார் ஜோதிகா. அது நிறைவேறியதா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதே சுவாரசியம்.

திரைக்கதை

2017 வாழ்க்கையும், 1978-ம் ஆண்டு ஊர்வசியின் கல்லூரி நினைவுகளுமாக திரைக்கதை கலந்து வருவது ரசிக்க வைக்கின்றது.அதற்கு ஏற்ப எஸ்.மணிகண்டனின் ஒளிப்பதிவும், வண்ணங்களும் மிகவும் சிறப்பு.

MM2கல்லூரி வாழ்க்கையில் அவ்வளவு உற்சாகமாகவும், சேட்டையாகவும் இருந்த பெண்கள் மூவரும், திருட்டுத்தனமாக ஒரு சினிமா பார்த்த குற்றத்திற்காக, கல்லூரியை விட்டு நிறுத்தப்பட்டு பிரிக்கப்படுவதைப் பார்க்கும் போது இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் வலிக்கும். தாத்தா, பாட்டி காலத்துத் தலைமுறையின் மீது கோபம் வரும்.

அதே போல், அந்த மூன்று பெண்களும் திருமணத்திற்குப் பிறகு, கணவரால், பிள்ளைகளால் ஒரு பொம்மை போலும், பகடைக் காயாகவும் உருட்டப்பட்டு, தங்களது சந்தோஷங்களையெல்லாம் இழந்து, ஒரு இயந்திரம் போல் மாறியிருப்பதைப் பார்க்கும் போதும் நிச்சயம் மனம் உறுத்தும். காரணம், இன்றும் நம் வீட்டில் அம்மாவாவாக, சித்தியாக, பெரியம்மாவாக, அத்தையாக, மூத்த அக்காவாக அப்படி ஒரு பெண் நிச்சயம் இருப்பார்.

MM5இந்தப் படம் பார்த்த பிறகு, நிச்சயமாக அவர்களது பால்ய வயது ஆசைகளைக் கேட்டறிய நேரம் ஒதுக்குவோம். ஜோதிகா செய்வது போல், ஒரு மூன்று நாட்களாவது அவர்களை அவர்களாக வாழவிடுவோம் என்ற எண்ணம் வரும். அந்த வகையில், இயக்குநர் பிரம்மாவைப் பாராட்ட வேண்டும்.

என்றாலும், சாலையில் சிறுநீர் கழிக்கும் இளைஞனை ‘சைகை’ காட்டி மிரட்டுவது, காதல் ஜோடிகளைச் சேர்த்து வைப்பது, கொலை செய்ய வரும் ரௌடிகளைத் தடுப்பது என ஜோதிகா செய்வது படத்திற்கு ஓகே.. நடைமுறையில் அது சாத்தியமா? என்பது கேள்விக் குறியே.

பெண்களை மதிக்கவில்லையென ஆண்களைக் குற்றம்சாட்டுவது சரி.. ஆனால் கல்யாணம் பண்ணா குழந்தை பெத்துக்கணும்.. அதை ரெண்டு வருஷம் தோளில் தூக்கிப் போட்டுக்கிட்டு அலையணும். அதனால நான் குழந்தையெல்லாம் பெத்துக்கமாட்டேன் என ஜோதிகா ஒரு வசனம் பேசுகிறார். இப்படியே எல்லாப் பெண்களும் நினைத்துவிட்டால், உலகில் ஜனனம் ஏது?

இரண்டாம் பாதியில், ஜோதிகா, ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யாவின் பயணம் ஒளிப்பதிவில் பார்க்க நன்றாக இருக்கின்றது. ஆனால் சுவாரசியம் குறைவு தான். அங்கு காட்சிகளை வெட்டியிருக்கலாம் அல்லது சிலவற்றை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

படத்தில் வேறு என்ன சுவாரசியம்?

ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா  இந்த மூன்று முன்னாள் கதாநாயகிகளும் தங்களுக்கே உரிய தனித்துவமான நடிப்பால், ரசித்து, சிரிக்க வைத்திருக்கிறார்கள். முரட்டுக் கணவனாக நாசரும், குடிகாரக் கணவனாக லிவிங்ஸ்டனும் மிகச் சிறப்பான நடிப்பு. மகன்களாக பவேல், கோகுல்நாத் பொருத்தம்.

MM6ஜோதிகாவின் துறுதுறுப்பும், ஸ்டைலும் நன்றாக இருக்கின்றது. இன்ப அதிர்ச்சியாக அவரது காதலராக வருகிறார் பிரபல நடிகர். (ஆங்.. இல்லை இல்லை.. நீங்கள் நினைப்பவர் இல்லை)

“பெத்தவளுக்கு சமைச்சுப் போட்டா செத்த பிறகு சொர்க்கம். கட்டுனவளுக்குச் சமைச்சுப் போட்டா வாழும் போதே சொர்க்கம்”

“மனசுக்குப் புடிச்சவன கட்டிக்கணும். அவன் கூட மட்டும் தான் வாழணும். அது தான் உண்மையான சுதந்திரம்”

“எதுக்குடா கலைக்கச் சொன்ன? பொம்பளப் புள்ளன்னு தான கலைக்கச் சொன்ன? அதுக்கப்புறம் கிடைச்சுதா?”

இப்படியாக சவுக்கடி வசனங்களும் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

ஜிப்ரான் இசையில், ‘வாடி திமிரா’, ‘கருகருன்னு’ பாடல்கள் இனிமை. பின்னணி இசை ரசனை.

மொத்தத்தில் – ‘மகளிர் மட்டும்’ – அருமையான படம்.. பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் தான்..

-ஃபீனிக்ஸ்தாசன்