கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் முன்னாள் பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான துன் மகாதீர் மீண்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் மலேசிய அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.
இந்நிலையில் மலேசியாகினி இணையத் தளத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் லங்காவி அல்லது புத்ரா ஜெயாவில் தான் போட்டியிடக் கூடும் என மகாதீர் கோடி காட்டியுள்ளார்.
90 வயதைக் கடந்து விட்டாலும் இன்னும் திடகாத்திரத்துடன் அரசியல் மேடைகளில் வலம் வரும் மகாதீர், தற்போது பெர்சாத்து கட்சியின் லங்காவி தொகுதி கிளை ஒன்றின் தலைவராக இருந்து வருகிறார்.
லங்காவி தீவை அதியற்புதமாக உருமாற்றி உலக வரைபடத்தில் சிறந்த சுற்றுலா தளமாக அதனை இடம் பெறச் செய்த காரணத்தால் அங்கு அவருக்கு அபரிதமான ஆதரவு கிடைக்கும் என்பதால் அவர் அங்கு போட்டியிடலாம்.
அதே வேளையில் புத்ரா ஜெயாவின் உருவாக்கத்திற்கும் முழு முதற்காரணம் மகாதீர்தான். அரசாங்க ஊழியர்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் அவர் போட்டியிட்டால் அரசு ஊழியர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், புத்ரா ஜெயாவின் பெரும்பான்மை வாக்காளர்கள் நடப்பு அரசு ஊழியர்கள் என்பதால், அவர்கள் தங்களின் வாக்கு யாருக்கு என்பது தெரிந்து விடக் கூடும் என்ற அச்சத்தில் தேசிய முன்னணி வேட்பாளருக்கே வாக்களிக்கக் கூடிய அபாயம் நிலவுகின்றது.
இதன் காரணமாக, தனது பூர்வீக மாநிலமான கெடாவிலேயே – அங்குள்ள லங்காவி தொகுதியிலேயே – மகாதீர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.