Home நாடு நஜிப் அறிவிப்பு என்ன? நாடெங்கும் பரபரப்பு!

நஜிப் அறிவிப்பு என்ன? நாடெங்கும் பரபரப்பு!

882
0
SHARE
Ad

najibகோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் அம்னோ தலைமையகத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எத்தகைய அறிவிப்புகளை வெளியிடப்போகிறார் என்ற ஆரூடங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகின்றன.

இந்தக் கூட்டத்திற்கு நாடு முழுமையிலும் உள்ள அம்னோ கட்சியின் மந்திரி பெசார்கள் கலந்து கொள்ள அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. பெர்லிஸ் மாநிலத்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தனது வருகையை பாதியில் இரத்து செய்து விட்டு தலைநகர் திரும்புகிறார்.

தேசிய முன்னணி தலைவர்களும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. உதாரணமாக, சரவாக் மாநில தேசிய முன்னணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என மலேசியாகினி இணையத் தளம் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

முழுக்க முழுக்க அம்னோ தலைவர்களைக் கொண்ட சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பாக இது இருப்பதால், அம்னோ குறித்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கியமாக அம்னோ தலைமைத்துவ வரிசையில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.

தற்போது துணைப் பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடிக்குப் பதிலாக அம்னோவின் உதவித் தலைவராக இருக்கும் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் நியமிக்கப்படலாம் என்ற சாத்தியமும் இருக்கிறது.

ஹிஷாமுடின் தற்போது தற்காப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் வேளையில், அண்மையில் பிரதமர் துறையில் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரை அடுத்த கட்டத் தலைமைத்துவத்திற்குத் தயார்ப்படுத்தும் முன்னோடி நியமனம் இதுவென அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் நிலவினாலும், கடந்த கால பாரம்பரிய நடைமுறைகளை வைத்துப் பார்க்கும்போது அவ்வாறு நடைபெற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

  • செல்லியல் தொகுப்பு