சென்னை – அரசியல் நுழையப் போகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கான நாளையும் குறித்து விட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் டைம்ஸ் நௌ ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கமல் இன்னும் நூறு நாட்களுக்குள் தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடக்குவேன் எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை சிஎன்என்-நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில் இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதிருக்கும் தமிழகக் கட்சிகள் ஊழல் பின்னணியைக் கொண்டவை என்றும் சாடியுள்ள கமல், எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும், தொடங்கினால் தனிக் கட்சிதான் என்றும் கூறியிருக்கிறார்.
அதே வேளையில் மதப்பின்னணியைக் கொண்ட பாஜகவுடன் இணையப் போவதில்லை என்றும் கமல் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய கட்சி தொடங்குவது குறித்தும், அரசியல் குதிக்கப் போவது குறித்தும் ஏற்கனவே, ரஜினியிடம் பேசிவிட்டதாகவும், எப்போதும்போல் இருவரும் ஒருவரை ஒருவர் பகிரங்கமாகத் தாக்கிக் கொள்ளக் கூடாது என எங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வைத் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்றும் கமல் கூறியிருக்கிறார்.