Home நாடு ஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் – சம்பந்தனுக்கு செனட்டர் பதவி!

ஐபிஎப் கட்சிக்கு அங்கீகாரம் – சம்பந்தனுக்கு செனட்டர் பதவி!

1002
0
SHARE
Ad

sambanthan-senator-sppointed-25092017 (2)கோலாலம்பூர் – அமரர் டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதனால் உருவாக்கப்பட்டு, நீண்ட காலமாக தேசிய முன்னணிக்கு ஆதரவான அரசியல் இயக்கமாக இயங்கி வரும் ஐபிஎப் எனப்படும் இந்திய முன்னேற்ற முன்னணி கட்சியின் தேசியத் தலைவரான டத்தோ எம்.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை (25 செப்டம்பர் 2017) மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அந்தக் கட்சிக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

14-வது பொதுத் தேர்தலை நாடு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அனைத்துத் தரப்பு இந்தியர் வாக்குகளை ஒருங்கிணைத்துத் திரட்ட தேசிய முன்னணி கொண்டிருக்கும் வியூக இலக்கை அடைவதற்கான மற்றொரு நடவடிக்கையாக நேற்றைய செனட்டர் நியமனம் பார்க்கப்படுகின்றது.

dato-pandithanஅதிலும், எம்ஜி.பண்டிதனின் (படம்) சாதாரணத் தொண்டர்களில் ஒருவராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடக்கிய சம்பந்தன், தற்போது செனட்டர் என்ற உயரிய அரசுப் பதவியையும், டத்தோ பட்டத்தையும் பெற்றிருப்பது சாதாரண தொண்டனும் அரசியல் வாழ்வில் முன்னுக்கு வர முடியும் என்பதற்கான இன்னொரு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஐபிஎப் வளர்ச்சி

1988-ஆம் ஆண்டில் மஇகாவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.பண்டிதன் மீண்டும் கட்சிக்குத் திரும்ப நடத்திய கடுமையானப் போராட்டங்கள் தோல்வியில் முடிந்த காரணத்தால், அவர் தனிக் கட்சி தொடங்கி அதற்கு ஐபிஎப் எனப் பெயரிட்டு தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.

1990-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அம்னோவிலிருந்து விலகி, செமாங்காட் 46 கட்சியை நடத்தி வந்த துங்கு ரசாலி ஹம்சாவுடன் கரம் கோர்த்த எம்ஜி.பண்டிதனின் ஐபிஎப் கட்சி சில நாடாளுமன்றத் தொகுதிகளிலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டுத் தோல்வி கண்டது.

IPF-Logoஇருப்பினும், நாடு முழுமையிலும் ஐபிஎப் கட்சிக்கு அப்போது கிடைத்த கணிசமான வாக்குகள் காரணமாக, அப்போதைய பிரதமர் துன் மகாதீர் அந்தக் கட்சியின் மீதான தனது பார்வையை மாற்றிக் கொண்டார்.

எம்.ஜி.பண்டிதனும் தேசிய முன்னணியோடு நெருக்கம் காட்டினார். மகாதீர், ஐபிஎப் கட்சியை அதிகாரபூர்வமற்ற தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியாகவே நடத்தினார்.

அதுமட்டுமல்லாமல், 1995-ஆம் ஆண்டில், எம்.ஜி.பண்டிதனுக்கு செனட்டர் பதவியும் வழங்கி அவரது ஆதரவுக்கு அங்கீகாரம் அளித்தார் மகாதீர். இருப்பினும் பண்டிதனின் தவணைக் காலம் முடிந்த பின்னர் வேறு யாரும், பண்டிதனுக்குப் பதிலாக ஐபிஎப் கட்சியின் சார்பாக செனட்டர் பதவியை வகிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதற்குப் பின்னர் வந்த பிரதமர்களும், மற்ற தேசிய முன்னணித் தலைவர்களும் ஐபிஎப்பை தேசிய முன்னணியின் ஆதரவுக் கட்சியாக ஏற்றுக் கொண்டு உரிய மரியாதையைத் தொடர்ந்து வழங்கி வந்தனர்.

எம்.ஜி.பண்டிதன் தேசியத் தலைவராக இருந்த காலகட்டத்தில், ஒருமுறை தேசிய முன்னணிக் கூட்டத்தில் ஐபிஎப் கட்சியை தேசிய முன்னணியில் இணைத்துக் கொள்ளும் பரிந்துரையை மகாதீர் முன்வைத்தார் என்று கூறுவார்கள்.

sambanthan-senator-sppointed-25092017 (1)நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் வாழ்த்து…

ஆனால், அப்போதைய மஇகா தேசியத் தலைவர் (துன்) சாமிவேலுவோ ஐபிஎப் கட்சியை தேசிய முன்னணியைச் சேர்த்துக் கொள்வதாக இருந்தால், மஇகா தேசிய முன்னணியிலிருந்து விலகி நிற்கும் என்ற உறுதியான நிலைப்பாட்டை அந்த தேசிய முன்னணிக் கூட்டத்தில் அறிவிக்க, அதன்பின்னர், மகாதீர் ஐபிஎப் கட்சியை தேசிய முன்னணியில் இணைக்கும் பரிந்துரையை மீட்டுக் கொண்டாராம்!

இருப்பினும், தொடர்ந்து தேசிய முன்னணிக்கு விசுவாசமாகவும், ஆதரவாகவும் இருந்து வரும் காரணத்தால், ஆண்டுதோறும் ஐபிஎப் கட்சி உறுப்பினர்களுக்கு மாநில சுல்தான்கள் மற்றும் மாமன்னரின் பிறந்த நாளின்போது விருதுகள் வழங்கியும் வேறு சில அங்கீகாரங்களையும் தந்து வரும் தேசிய முன்னணி தலைமைத்துவம் தற்போது செனட்டர் பதவியை வழங்கி ஐபிஎப் கட்சிக்கு மற்றொரு அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது.

sambanthan-senator-sppointed-25092017 (3)நேற்றைய பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது நாடாளுமன்றத்தில் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுடன் சம்பந்தன்…

ஏற்கனவே இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கும் ஐபிஎப் கட்சியின் சார்பாக சம்பந்தனுக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டிருப்பதால், அந்தக் கட்சியின் தலைவராக சம்பந்தனை அங்கீகரிக்கும் நடவடிக்கையாகவும் இந்த செனட்டர் நியமனம் பார்க்கப்படுகிறது.

செனட்டராக நியமனம் பெற்றிருக்கும் டத்தோ சம்பந்தன் தனது சேவையில் சிறக்க, இந்திய சமுதாயத்திற்கு தனது பதவியின் வழி சமுதாயப் பணிகளை ஆற்ற – செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இரா.முத்தரசன்