கொழும்பு – “இலங்கைப் போரினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழர் வாழும் பகுதிகளில், மலேசிய அரசாங்கம் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது” என்று இளைஞர் விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.
இந்தப் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக சரவணன் தற்போது இலங்கைக்கு வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கிறார்.
சரவணன் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மலேசிய அரசாங்கம் புனர்வாழ்வு தொண்டூழிய கட்டுமானப் பணிகளை இலங்கையில் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக கிளிநொச்சி, நுவாரேலியா, அனுராதபுரம், முத்தூர் ஆகியப் பகுதிகளில் புனர்வாழ்வு பணிகள் மலேசிய அரசின் நேரடிப் பார்வையில் நடைபெறுவதாக துணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
புனரமைப்பு கட்டுமானப் பணிகளை காண்காணித்துத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதற்கு சரவணன் தனது அமைச்சின் உயர் அதிகாரிகளோடு தற்போது இலங்கையில் உள்ளார்.
நமது துணையமைச்சர் மேற்கொண்டுள்ள இந்த புனர்வாழ்வு புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நுவரெலியா வெஸ்ட் வர்ட் ஹோ தமிழ் வித்யாலயத்தில் மாணவர்களுக்கான வகுப்பறைகளும், கழிப்பறை, சிற்றுண்டிச் சாலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அவ்விடத்திற்கு வருகை மேற்கொண்ட சரவணன், அப் பள்ளிக்கு மேலும் உதவிகளை செய்யவுள்ளதாக கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்டு கால்களை இழந்தவர்களுக்கு நவீன செயற்கைக் கால் பொருத்துதல், மாணவர்களுக்கு கணினி பயிற்சி மையங்கள், நூல் நிலையம், சிற்றுண்டிச் சாலைகள் அமைத்தல், நீர் சுத்திகரிப்பு மற்றும் விவசாய விளை நிலங்களுக்கு நீர் தெளிப்பு் (sprinkler) குழாய்களை அமைத்தல் போன்ற பல்வேறு கட்டுமான புனரமைப்புத் திட்டங்களை தொண்டூழிய முறையில் மலேசிய அரசாங்கம் இலங்கையில் மேற்கொண்டு வருவதாக சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.