மணிலா – மலேசியாவில் உள்ள ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு நிதியுதவி வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் பிலிப்பைன்ஸ் மருத்துவர் ஒருவர், தங்கள் நாடு தீவிரவாதிகளை உருவாக்கும் ஒரு இடமாக இருப்பதாக தெரிவித்திருப்பதாக அமெரிக்க நீதித்துறை தகவல் வெளியிட்டிருக்கிறது.
ரூசெல் சாலிக் என்ற அந்நபர் இன்னும் இரண்டு பேருடன் இணைந்து, மலேசியாவில் கடந்த 2016-ம் ஆண்டு புனித ரமடான் மாதத்தின் போது, தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர்.
37 வயதான ரூசெல் சாலிக், தீவிரவாத நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கியதாகவும், பிலிப்பைன்சில் இருந்த படியே அதனை அவன் செய்திருக்கிறான் என்றும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்திருக்கிறது.
மலேசியாவில் பூச்சோங் மோவிடா கேளிக்கை விடுதியில் நடந்த தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு அதாவது ஜூன் 24-ம் தேதி, 2016-ம் ஆண்டு ஜோகூரைச் சேர்ந்த ஜசானிசம் ரோஸ்னி என்ற நபருக்கு சாலிக் நிதி அனுப்பியதாகவும், அமெரிக்க நீதித்துறை குறிப்பிட்டிருக்கிறது.