Home இந்தியா முன்னாள் தளபதி தியாகி ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம் வாங்கியது உண்மை: சிபிஐ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

முன்னாள் தளபதி தியாகி ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம் வாங்கியது உண்மை: சிபிஐ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

579
0
SHARE
Ad

புதுடெல்லி, மார்ச் 25-  360 கோடி  ரூபாய் ஹெலிகாப்டர் ஊழலில் இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகி லஞ்சம் வாங்கியது உண்மை என சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி தகவலால் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் போன்ற விவிஐபிக்கள் உபயோகத்துக்காக இத்தாலியை சேர்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் அங்கமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ. 3600 கோடிக்கு 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்தம் போட்டது.

இதில் ரூ.360 கோடிக்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் சிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்திய அரசியலில் பெரும் விவாதங்கள் கிளம்பின. இத்தாலி அரசிடம் இருக்கும் தகவல்களை பெற மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.

#TamilSchoolmychoice

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக, விமானப்படை முன்னாள் தளபதி தியாகி உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. தியாகி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது.

இதில் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை ஒன்றை சிபிஐ தயார் செய்துள்ளது. அதில் தியாகி மற்றும் அவரது உறவினர்கள் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  லஞ்சப்பணம் ரூ.360 கோடி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதற்கான ஆதாரங்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் சிபிஐ கடந்த வாரம் பகிர்ந்து கொண்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு தியாகியின் சகோதரர்கள் ஜூலி, டோக்சா மற்றும் சந்தீப் தியாகி ஆகியோருக்கு இரண்டு தவணைகளாக ரூ.1 கோடி மற்றும் ரூ. 1.75 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வங்கி ஆவணங்கள் சிபிஐக்கு கிடைத்துள்ளது. இந்தப் பணம் வேறொரு காரியத்துக்காக தங்களுக்கு வழங்கப்பட்டதாக தியாகி சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.