Home நாடு “இந்தியர்களின் வாழ்வில் ஒளி பெருகட்டும்” – டாக்டர் சுப்ரா

“இந்தியர்களின் வாழ்வில் ஒளி பெருகட்டும்” – டாக்டர் சுப்ரா

961
0
SHARE
Ad

deepavali-2017-drsubra-message-tamil-bannerகோலாலம்பூர் – மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இந்தத் தீபத்திருநாளில் இந்தியர்களின் இல்லங்களில் இருள் நீங்கி ஒளி மிளிர்வதைப் போன்று இந்தியர்களின் உள்ளங்களிலும் வசந்தங்களும் நன்மைகளும் பெருக்கெடுத்துப் புதியதொரு சமுதாயமாக உருமாற்றம் அடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

டாக்டர் சுப்ராவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:-

“தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் இவ்வினிய தருணத்தில், அனைத்து இந்துக்களுக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தீபத்திருநாளில் இல்லங்களில் இருள் நீங்கி ஒளி மிளிர்வதைப் போன்று இந்தியர்களின் உள்ளங்களிலும் வசந்தங்களும் நன்மைகளும் பெருக்கெடுத்துப் புதியதொரு சமுதாயமாக உருமாற்றம் அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் குடும்ப உறவினர்களிடையே ஆனந்தமும், சாந்தமும் நிலவி சிறப்பினை அடைய வேண்டும்.

#TamilSchoolmychoice

இந்தியர்களின் தாய்க்கட்சியான ம.இ.காவின் தேசியத் தலைவர் எனும் முறையில் சமுதாய உருமாற்றத்தைக் கொண்டு வரவேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு இருக்கின்றது. அவ்வகையில், நாட்டிற்கு முதுகெலும்பாகத் திகழும் இளைஞர்களிடையே நற்சிந்தனைகள் மேலோங்கி, சமுதாய உருமாற்றத்திற்கு வித்திடப் பாடுபட வேண்டும். அதன் அடிப்படையில் இவ்வாண்டு உதயமாகியிருக்கும் இந்தியர்களுக்கான வியூகப் பெருந்திட்டத்தில் இந்தியர்களின் நலன்களுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வியூகப் பெருந்திட்ட அமலாக்க வழி நாட்டின் இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திட முடியும். அதன்வழி தீபங்களில் ஒளிரும் ஒளியைப் போன்று இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் வாழ்விலும் ஒளி பெருகும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. எனவே, இப்பெருந்திட்ட அமலாக்கத்திற்கு அனைவரும் துணை நிற்க வேண்டுமென இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.”

deepavali-2017-drsubra-message-eng-banner“பல இனத்தவர்கள் வாழும் இந்நாட்டில் இத்தீபத்திருநாளானது அனைத்து மலேசியர்களிடையே நல்லிணக்கமும் ஒற்றுமை உணர்வும் மேலோங்குவதற்கு ஊன்றுகோலாக அமைய வேண்டும். இதுவே ஒரு நாடு சுபிட்சமும் ஒற்றுமையும் அடைவதற்கான முக்கிய அம்சமாகும்.

ம.இ.காவின் தார்மீக மந்திரமான “ஒரே குரல்; ஒன்றே இலக்கு” என்பதற்கொப்ப இன வேறுபாடின்றி மிதவாதத் தன்மையுடன் செயல்பட வேண்டும். அவ்வகையில், பண்பாட்டைப் பாதுகாத்து நேர்த்தியான முறையிலும் சமுதாய ஒற்றுமையையும் கடைப்பிடித்து இத்திருநாளைக் கொண்டாட வேண்டும். குடும்பத்தில் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், சுற்றத்தார் மத்தியில் ஒற்றுமை, அன்பு, பாசம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைகள் அதிகரித்துக் குதூகலமான தீபாவளியாக இந்நாள் அமைய வகை செய்து ஒற்றுமையை வலுப்பெறச் செய்ய வேண்டும்.

தொடர்ந்து, ஆரோக்கியமான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் கலாச்சாரம் நம்மிடையே மேலோங்க வேண்டும். விருந்தோம்பல் முறையில் ஆரோக்கியத்தை நாம் கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாகும்.

ஒளிமிகும் இத்திருநாளில், எல்லோரது வாழ்விலும் இன்ப ஒளி பெருகி எல்லா வளமும் பெற்று, இன்புற்று, பகைமை மறந்து, ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதுடன் அனைவரும் சிறப்புடன் வாழவும் இறைவனை இறைஞ்சுகிறேன்.”