Home 13வது பொதுத் தேர்தல் சுங்கை சிப்புட்டில் தேவமணியை விட சாமிவேலுவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

சுங்கை சிப்புட்டில் தேவமணியை விட சாமிவேலுவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

874
0
SHARE
Ad

Samy Vellu photoசுங்கை சிப்புட், மார்ச் 26- டத்தோஸ்ரீ சாமிவேலுவின் கோட்டையாக இருந்த சிங்கை சிப்புட் தொகுதியில் வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிட்டால் மற்ற வேட்பாளரைவிட அவருக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் என சுங்கை சிப்புட் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிங்கை சிப்புட் தொகுதி தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக டத்தோஸ்ரீ சாமிவேலு பணியாற்றி வருகிறார். அண்மையில் அவர் ஒரு தமிழ் நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், தமது  ஆதரவாளர்களும், சீன வாக்காளர்களும் மீண்டும் இத்தொகுதியில் தன்னை போட்டியிடும்படி கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அவ்வாறு போட்டியிட்டால் தனக்கு ஆதரவு வழங்குவதாக அவர்கள் கூறியுள்ளதாகவும் சாமிவேலு தெரிவித்திருந்தார்.

தேவமணி சுங்கை சிப்புட் வேட்பாளரா?

#TamilSchoolmychoice

சுங்கை சிப்புட் தொகுதியில்  டத்தோ தேவமணி போட்டியிடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு அத்தொகுதியில் தேவமணி நிறுத்தப்பட்டால் அத்தொகுதி அவருக்கு புதியது என்பதோடு அத்தொகுதியில் போட்டியிடவிருக்கும் டாக்டர் மைக்கல் ஜெயக்குமாருடன் இவரை வாக்காளர்கள் ஒப்பிட்டு பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.

அத்தகைய ஒப்பீடு தேவமணிக்குத்தான் பாதகமாக இருக்கும். காரணம், டாக்டர் ஜெயகுமார் ஏற்கனவே பல ஆண்டுகளாக தனது சேவைகளின் வழி சுங்கை சிப்புட் தொகுதியில் ஆழமாக வேரூன்றியவர்.

2008 பொதுத் தேர்தலில் சாமிவேலுவின் செல்வாக்கையே அசைத்துப் பார்த்து, தோல்வியடையச் செய்தவர்.

எனவே, புதிய வேட்பாளராக களமிறங்கும் தேவமணி, என்னதான் சாமிவேலு அவரது பின்னணியில் இருந்து வேலை செய்தாலும். ஜெயகுமாரைத் தோற்கடிப்பது கடினமாக இருக்கும்.

ஆனால் சாமிவேலுவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்

அதே வேளை கடந்த பொதுத்தேர்தலில் தோல்வி காணும் வரை சுங்கை சிப்புட்டை தனது கோட்டையாக வைத்திருந்த சாமிவேலு மீண்டும் போட்டியிட்டால் அவருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

காரணம், அந்த தொகுதியில் அவரது 34 ஆண்டுகால சேவைகளை வாக்காளர்கள் இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.

ஜெயகுமாரின் தனிப்பட்ட சேவைகள் சிறப்பான முறையில் இருந்தாலும், சுங்கை சிப்புட் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் பிரமாதமாக இல்லை.மக்கள் கூட்டணியின் மற்ற கட்சிகளோடு ஜெயகுமார் அவ்வளவாக இணைந்து வேலை செய்யாத காரணத்தால், மக்கள் கூட்டணி என்ற அளவிலும் இங்கு எதிர்க்கட்சிகள் பலவீனமாகவே இருக்கின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஹிண்ட்ராப் போராட்டக் குரல் ஒலித்த போது சாமிவேலுதான் ஹிண்ட்ராப்புக்கு எதிராக செயல்பட்டார் என்பது போன்ற தோற்றமும், சாமிவேலுவின் தலைமைத்துவ தோல்வியினால்தான் ஹிண்ட்ராப் போராட்டம் தோன்றியது என்ற பிரச்சாரமும் வலுவாக இருந்த காரணத்தால் சுங்கை சிப்புட் இந்திய வாக்காளர்கள் ஒருமித்து சாமிவேலுவுக்கு எதிராக வாக்களித்தனர். அதுவம் அவரது 2008 தோல்விக்கு ஒரு காரணமாகும்.

ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை.

பிஎஸ்எம்-மக்கள் கூட்டணியில் இணைவதில்  குழப்பம்

மேலும் மைக்கேல் ஜெயக்குமார் பி.எஸ்.எம். எனப்படும் பார்ட்டி சோஷலிஸ் ராயாட் கட்சியைச் சேர்ந்தவர். சென்ற பொதுத்தேர்தலில் அக்கட்சி பதிவு பெறாமல் இருந்தது. அதனால் ஜெயகுமார் 2008 பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் தற்போது பிஎஸ்எம் கட்சி பதிவு பெற்ற கட்சியாக இயங்கி வருகிறது.

வரும் பொதுத்தேர்தலில் மைக்கேல் ஜெயக்குமார் பி.எஸ்.எம். கட்சி சின்னத்தில் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளார்.அதற்காக மக்கள் கூட்டணி தலைவர்களை வலியுறுத்தியும் வருகின்றார்.

ஆனால் பிஎஸ்எம் பதிவு பெற்ற கட்சியாக இருந்தாலும் மக்கள் கூட்டணி அக்கட்சியை இன்னும் தங்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்புக்கான பேச்சு வார்த்தைகள் தொடர்வதாக கூறி வருகின்றார்கள்.

ஆதலால் வேறு கட்சியின் சின்னத்தில் -பிகேஆர் அல்லது ஜசெக சின்னத்தில் – போட்டியிட மக்கள் கூட்டணி தலைவர்கள் ஜெயகுமாரை வற்புறுத்தலாம்.  அவர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.

இது மைக்கல் ஜெயகுமார் அந்த தொகுதியை மீண்டும் வெல்வதற்கு மிகவும் எதிர்மறையான பாதிப்புக்களை உருவாக்கலாம்.

சாமிவேலு இழந்த கௌரவத்தை மீட்க கடுமையாக போராடுவார்.

இது போன்ற குழப்பமான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தே.மு. எண்ணம் கொண்டுள்ளது. ஆனால் அதற்கு இப்போதைய தேவை ஜெயகுமாரை முறியடிக்கக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த வேட்பாளர்.

அப்படி ஒருவரை நிறுத்தினால் நிச்சயம் தேசிய முன்னணி சுங்கை சிப்புட்டில்  வெற்றி பெறலாம் என்ற  எண்ணம் தேசிய முன்னணி ஆதரவாளர்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது.

அந்த சக்தி வாய்ந்த வேட்பாளர் யார்? ட த்தோ தேவமணியா? டத்தோஸ்ரீ சாமிவேலுவா?  இந்த முடிவு பிரதமரின் கையில்…!

ஆனால் அந்த வேட்பாளர் சாமிவேலுவாக இருந்தால், தனது இந்த 77 வது வயதில் – 2008இல் தான் இழந்த கௌரவத்தை மீட்பதற்காக – தான் அடைந்த தோல்விக்கு பரிகாரம் தேடுவதற்காக – தான் இதுவரை வாழ்நாளில் நடத்தாத அளவுக்கு ஒரு மாபெரும் அரசியல் போராட்டத்தை மேற்கொண்டு சாமிவேலு கடுமையாக பாடுபடுவார் என்பது திண்ணம்!

அத்தகைய ஒரு கடுமையான போராட்டமே சுங்கை சிப்புட்டை தேசிய முன்னணி மீண்டும் வெல்வதற்கு வழிவகுக்கும்.

அந்த வகையில் தேவமணியை விட சாமிவேலுவே சுங்கை சிப்புட்டில் வெல்வதற்கு சிறந்த வேட்பாளர் என்று உள்ளூர் ம.இ.காவினரும் கூறி வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.