கோலாலம்பூர் – நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தீர்வையற்ற மின்னியல் வளாகம் (Digital Zone) அமைப்பதும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் அமைக்கப்படும் மலேசியாவின் மின்னியல் வளாகம் சீனாவுக்கு அடுத்து உலகிலேயே இங்குதான் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த வளாகம் செயல்படத் தொடங்கும்.
இணையம் வழியாக வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ஈர்க்கும் இந்த மின்னியல் வளாகத்தைப் பயன்படுத்தி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களின் உற்பத்திகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய முடியும்.
இணையம் வழியான வர்த்தகம் மலேசியாவில் 2020-ஆம் ஆண்டுக்குள் 211 பில்லியன் ரிங்கிட்டாக விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னியல் துறை வளாகத்தின் அனைத்து வணிக நடவடிக்கைகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு, ஓரிடத்தில் இயங்குவதால் வணிக நிறுவனங்கள் மேலும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மின்னியல் வளாகம் அமைக்கப்படுகிறது.