Home நாடு “மக்கள் நலன் பேணும் வரவு செலவுத் திட்டம்” – தேவமணி பாராட்டு

“மக்கள் நலன் பேணும் வரவு செலவுத் திட்டம்” – தேவமணி பாராட்டு

1525
0
SHARE
Ad

devamany-1புத்ரா ஜெயா -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் பேணும் திட்டம் என மஇகா தேசியத் துணைத் தலைவரும், பிரதமர் துறையின் துணையமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி பாராட்டியுள்ளார்.

“பிரதமர் துறையின் பொருளாதார திட்டமிடல் பிரிவிற்கான பொறுப்பு துணையமைச்சர் எனும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்கள் நலன் பேணும் திட்டமாக மீண்டும் அமைந்துள்ளதில் பெருமிதம் அடைகிறேன்” என தேவமணி நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்தார்.

“பிரதமரின் பொருளாதார திட்டங்களின் வாயிலாக தேசிய நிகர வருமானம் அதிகரித்துள்ள வேளையில், பணவீக்கமும் மக்களின் பணியின்மை பிரச்சினைகளும் குறைக்கப்பட்டு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் பெருகி வருகின்றன. பிரதமரின் வியூகங்கள் வாயிலாக 2010-ஆம் ஆண்டு முதல் நாட்டின் நிகர வருமானம் 46% அதிகரித்துள்ளது. வறுமைக்கோட்டு நிலையில் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதுடன், பி-40 குழுமத்தின் வருமானமும் அதிகரித்துள்ளது. பிரதமரின் சாதுரிய நடவடிக்கைகளின் வாயிலாக மக்கள் நலன்கள் பெற்று, நாடும் உலக பொருளாதார மந்த சூழ்நிலையின் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது” என தேவமணி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேவமணியின் அறிக்கையில் மேலும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:

“உலக வங்கி குறியீட்டின்படி நாடு 5.2% பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. கல்வி, தொழில் வாய்ப்புகள் அதிகரித்து, வாழ்க்கை தரம் மேம்பட்டு சமூக பிரச்சினைகளும் குறைந்துள்ளன.

2018ஆம் ஆண்டு தேசிய முன்னணி அரசாங்கம் உயர்நிலை முதலீட்டு திட்டங்கள், சிறு நடுத்தர தொழில்கள், வணிக நிதியுதவி திட்டங்கள் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தவுள்ளது. சுற்றுலா, மின்னியல் பொருளாதாரம், சுகாதார சுற்றுலா, விவசாயம் மற்றும் போக்குவரத்து துறைகளில் புதிய பரிமாணங்களும் காணப்படவுள்ளது.

2050 தேசிய உருமாற்றுத் திட்டம் இளைய தலைமுறையினரின் நாளைய தேவைகளுக்கான திட்டமாக செதுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, இலக்கவியல், இயந்திரவியல், பசுமை தொழிற்நுட்பம், உயர்க்கல்வி, விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகிய கூறுகளின் வாயிலாக இவ்வுறுமாற்றுத் திட்டம் வடிவமைக்கப்படும்.

மேலும், முதன் முறையாக எம்40 எனும் நடுவர்க்க குழுமத்திற்கும் இந்த வரவுசெலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், இரயில் தொடர்புகள் உட்பட்ட போக்குவரத்துத் துறை மேம்படுத்தப்படவுள்ளது. முதலீடுகள் அதிகரிப்பின் வழி புதிய வேலை அமர்வுகள், உயர் வருமான தொழில் வாய்ப்புகள், புத்தாக்க தொழிற்நுட்ப பரிமாற்றங்கள், நவீன வசதிகள் ஆகியவையும் அதிகரிக்கவுள்ளன.

2018 வரவு செலவு திட்டத்தின் கீழ் வரிக்குட்பட்ட ரிங்கிட் 20,000 முதல் 50,000 வருமானத்திற்கான வருமான வரி 2% குறைக்கப்பட்டுள்ளது. ரிங்கிட் 2,000-க்கு கீழ் பெறப்படும் வாடகை வருமானத்திற்கு 50% வரி சலுகை வழங்கப்படவுள்ளது. பணிக்கு திரும்பும் மகளிருக்கும் வரி சலுகை அளிக்கப்படவுள்ளது.

அதே வேளையில், பொதுத்துறையைப் போல் தனியார் துறையில் பணியாற்றும் மகளிருக்கு 90 நாள் பிரசவ விடுப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 5 மாதத்திற்கு அதிகமான கர்ப்பகால கட்டத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்தம் கணவர்களுக்கும் பணியிடத்தில் 1 மணிநேர விடுப்பும் வழங்கப்படவுள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு வித்திடும் வண்ணம் அடுத்த 4 ஆண்டுகளில் பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு ரிங்கிட் 200 அமானா சஹாம் பங்குகள் வழங்கப்படும்.”

இவை போன்று நன்மை பயக்கும் பல கூறுகள் 2018 வரவு செலவு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தேவமணி தெரிவித்திருக்கிறார்.