Home நாடு தகவல் தொழில்நுட்பத்தில் இளம் இந்திய தொழில்முனைவோர் முனைப்பு காட்ட வேண்டும் – வேதமூர்த்தி

தகவல் தொழில்நுட்பத்தில் இளம் இந்திய தொழில்முனைவோர் முனைப்பு காட்ட வேண்டும் – வேதமூர்த்தி

867
0
SHARE
Ad

புத்ராஜெயா: “மலேசிய இந்திய சமுதாயம் நான்காவது தொழில் புரட்சி, மின்னியல் (டிஜிட்டல்) பொருளாதாரம் மற்றும் தொழில் திறன் பயிற்சி குறித்து அதிக அக்கறைக் காட்டவேண்டும். அப்பொழுதுதான், உலகளாவிய பொருளாதார மாற்றத்திற்கு ஏற்பத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன், தேசிய அளவில் மற்ற இனங்களுக்கு ஈடாக தம்மை வளர்த்துக் கொள்ளவும் முடியும்” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“இன்றைய வர்த்தக பொருளாதார சூழலில் தரமான உற்பத்தி, விவேகமான தொழில் முனைவோர், திறமையான தொழிலாளர்கள் ஆகியவற்றில் இந்திய சமுதாயத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லாவிடில், எதிர்காலத்தில் தொழில் துறையில் நாம் பின் தங்கிவிட நேரிடும். இருக்கின்ற வாய்ப்பை வகையாகப் பயன்படுத்தவும் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி முன்னேறவும் இளம் தொழில் முனைவோர் அதிக அக்கறைக் காட்டினால்தான், பன்னாட்டு வர்த்தகச் சூழலுக்கு ஏற்ப நாம் ஈடு கொடுக்க முடியும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் மேம்பட்டு விளங்கினால்தான், இன்றைய பன்னாட்டு வர்த்தக உலகில் சாதிக்க முடியும் என்பதையும் இந்தியர்கள் நினைவில் கொள்வது நல்லது என அவர் அறிவுறுத்திய வேதமூர்த்தி “குறிப்பாக, ‘எஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, சிசிஏ எனப்படும் தகவல் இணைய பராமரிப்பு மற்றும் ‘பிக் டாட்டா அனலிடிக்ஸ் (‘BDA’) எனப்படும் பெருந்தரவு பகுப்பாய்வு குறித்தெல்லாம் வர்த்தக-தொழில் துறையினர் அறிந்து கொள்ள வேண்டும். மின் வணிகத்தை விஞ்சக்கூடிய நுட்பமெல்லாம் இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவை(ஐ)ப் போன்றக் கூறுகள் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்து, இந்திய சமுதாய நிபுணர்கள் முன்வந்து, நம் இந்திய இளம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுவதுடன், இந்தத் துறையில் சிறு – நடுத்தர மட்டத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப உதவ வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

“டிஜிட்டல் உலகில் கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் முன் வரிசையில் அணிவகுக்க, மலேசியாவோ அடுத்த நிலையில் தொடரும் போக்கை நாம் மாற்ற வேண்டும். மின்னியல் வணிக பெருந்திட்டத்தில், சிறு-குறு வர்த்தக நடவடிக்கை மூலம் 2025-ஆம் ஆண்டளவில் 38 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி உயர வேண்டும்; 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும். அதேவேளை, மலேசிய இந்தியர்கள் தம்மை மட்டும் உயர்த்திக் கொள்ளாமல், தேச உயர்வுக்கும் தங்களின் கடப்பாட்டை வழங்க வேண்டும். மலேசிய அரசாங்கமும் நான்காவது தொழில் புரட்சியில் அதிகமான இந்தியர்களை ஈடுபடுத்தும் வகையில் வர்த்தக-தொழில் துறை தலைவர்களுடன் இணைந்து செயல்படி முன் வந்துள்ளது” என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.