புதுடில்லி – உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை (ஜனவரி 15) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சிறுதொழில்களுக்கான வணிகர்களுக்கான மாநாடு ஒன்றில் புதுடில்லியில் கலந்து கொண்ட ஜெப் பெசோஸ் இந்தியாவில் தனது நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்யும் என்று தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இயங்கும் சிறுதொழில்களை மின்னிலக்கமாக்க (டிஜிடல்) 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமேசோன் முதலீடு செய்யும் என்ற இனிப்பான செய்தியையும் அவர் வழங்கினார்.
அமேசோன் இந்தியா என்ற தளத்தை 550,000 விற்பனையாளர்கள், 60,000 இந்திய உற்பத்தியாளர்கள், வணிக முத்திரை (பிராண்ட்) கொண்ட பொருட்களை உருவாக்கும் இந்திய வணிகர்கள் பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள அமேசோன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்ற தகவலையும் ஜெப் பெசோஸ் வெளியிட்டார். இவர்களுக்கெல்லாம் உதவுவதையே அமேசோன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
2025-ஆம் ஆண்டுக்குள் மேலும் 10 மில்லியன் உள்ளூர் வணிகங்களை இணையவழி வணிகங்களாக உருமாற்ற அமேசோன் திட்டமிட்டிருக்கிறது. அமேசோனின் முதலீட்டினால் உள்ளூர் வணிகர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பொருட்களை அடுத்த ஐந்தாண்டுகளில் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் பெசோஸ் தெரிவித்தார். இது பிரதமர் நரேந்திர மோடியின் “மேக் இன் இந்தியா” என்ற “இந்தியாவில் தயாரியுங்கள்” பிரச்சாரத்திற்கு மேலும் வலுவூட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, 5 பில்லியன் டாலர் முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள அமேசோன் கடப்பாடு கொண்டிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு இணையவழி வணிக நிறுவனங்களிடம் பலத்த போட்டியை எதிர்நோக்குகிறது அமேசோன். குறிப்பாக பிலிப்கார்ட் (Flipkart) அமேசோனுக்குக் கடுமையான போட்டியாளராக இந்தியாவில் திகழ்கிறது.
அமெரிக்காவின் சியாட்டல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசோன் இந்தியாவில் 2027-க்குள் இணையவழியான சில்லறை வணிகம் (retail market) 200 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடுகிறது. இந்தியா முழுமைக்குமான சில்லறை வணிகம் தற்போது 670 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
இந்தியா வந்த ஜெப் பெசோஸ் மகாத்மா காந்தி கல்லறைக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். “இப்போதுதான் இந்தியாவிற்கு வந்திறங்கினேன். அழகான மத்தியான வேளையை, உலகை உண்மையிலேயே மாற்றிய ஒருவருக்கு அஞ்சலி செலுத்தப் பயன்படுத்திக் கொண்டேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தியின் கல்லறையில் அஞ்சலி செலுத்தும் காணொளியோடு ஜெப் பெசோஸ் நேற்று புதன்கிழமை (ஜனவரி 15) பதிவிட்டார்.
“நாளையே நீங்கள் இறக்கப் போவதாக நினைத்துக் கொண்டு வாழுங்கள். எப்போதும் வாழப் போகிறோம் என்பதுபோல் கற்றுக் கொண்டே இருங்கள்” என்ற பொருளிலான காந்தியின் வாசகங்களையும் ஜெப் பெசோஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.(“Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.” – Mahatma Gandhi)
இந்திய நிகழ்ச்சிகளில் நரேந்திர மோடி பாணியிலான ஆடைகள் அணிந்து ஜெப் பேசோஸ் கலந்து கொண்டார்.