கோலாலம்பூர் – ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய பல தகவல்களையும், வழிகாட்டும் தன்மையையும் கொண்ட “மதிப்புமிகு ஆசிரியர்களே” என்ற நூலை கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள சுமார் 300 தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் அன்பளிப்பாக வழங்கினார்.
கடந்த புதன்கிழமை (01 நவம்பர் 2017) மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டத்தோ சரவணன் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த நூல்களை வழங்கினார். ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம், தமிழ் ஆய்வியல் பிரிவின் தலைவர் முனைவர் சேகர் நாராயணன் இந்த நூலின் ஆசிரியராவார்.
நூல்களை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்ச்சியில் உரையாற்றிய சரவணன், பல சுவையான தகவல்களை, சுருக்கமாகவும், தெளிவாகவும் கொண்டிருக்கும் இந்த நூல், ஆசிரியர்களுக்கு, அவர்களின் தொழில் முயற்சிகளில் மிகவும் உதவும் எனக் கருதியதால் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இந்த நூலை இலவசமாக வழங்கத் தான் முன்வந்ததாக சரவணன் கூறினார்.
சரவணன், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் தலைவருமாவார்.