Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘அவள்’ – நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு பேய் படம் பார்த்து!

திரைவிமர்சனம்: ‘அவள்’ – நீண்ட நாட்களாகிவிட்டது இப்படி ஒரு பேய் படம் பார்த்து!

1457
0
SHARE

Avalகோலாலம்பூர் – நீண்ட நாட்களாகிவிட்டது தமிழில் இப்படி ஒரு மிரட்டலான பேய் படம் பார்த்து.

தமிழ் சினிமாவில் பேய் படங்களில் எப்போது காமெடி கலக்கத் தொடங்கியதோ, அப்போதிலிருந்தே அதன் மீதான பயம் கலந்த எதிர்பார்ப்பும் மெல்ல குறைந்து வந்தது.

அவ்வப்போது ஆங்கிலத்தில் வரும் ‘THE CONJURING’ போன்ற பேய் படங்கள் தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தீர்த்து வந்தன.

80, 90 களில் வெளிவந்த பேய் படங்களை எடுத்துக் கொண்டால், மைக் மோகன் நடிப்பில் வெளிவந்த ‘உருவம்’ என்ற படம் இப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் மனதில் நடுக்கத்தை ஏற்படுத்தும். நிழல்கள் ரவி நடிப்பில் வெளிவந்த ‘மைடியர் லிசா’, அஜய் ரத்னம் நடிப்பில் வெளிவந்த ‘அதிசய மனிதன்’ இவையெல்லாம் மறக்க முடியாத ‘கிளாசிக்’ பேய் படங்கள். அப்படி ஒரு திகில் நிறைந்த திரை அனுபவத்தைக் கொடுக்க இதோ புதிதாக வந்திருக்கிறது சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் ‘அவள்’.

‘எதைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாதோ அதன் மீது நமக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும்’ என்று கூறுவார்கள். அதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் ‘அவள்’ இயக்குநர் மிலிண்ட் ராவ் நம்மை நேராக இமாச்சலப் பிரதேசத்திற்குக் கூட்டிச் சென்றுவிடுகிறார். அங்கு தான் மொத்த கதையும் நடக்கிறது என்பதோடு இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கிறது.

Aval1பனிப்பிரேதசத்தில் மலைகளுக்கு நடுவே தனியாக இருக்கின்றன இரண்டு பங்களாக்கள். ஒன்றில் சித்தார்த், ஆண்ட்ரியா வசித்து வருகின்றார்கள். மற்றொன்றில் அதுல் குல்கர்னி தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்.

எல்லாம் நல்லபடியாகப் போய் கொண்டிருக்கும் போது, அதுல் குல்கர்னியின் மூத்த மகளின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியத் தொடங்குகின்றது. டாக்டரான சித்தார்த் தனது நண்பரான மனநல மருத்துவர் சுரேஷை வைத்து அப்பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்கிறார்.

சிகிச்சை தொடங்கிய பின்னர் தான், அவளுக்கு மனநலம் பாதிக்கவில்லை. சில அமானுஷ்ய சக்திகள் அவளை ஆட்டிப் படைக்கின்றது தெரிய வருகின்றது. அவை என்ன? அவைகளுக்கும் அதுல் குல்கர்னியின் குடும்பத்திற்கு என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளை நோக்கி இரண்டாம் பாதி மிரட்ட மிரட்ட நகர்ந்து கிளைமாக்சை அடைகின்றது.

Aval-horrorசித்தார்த், ஆண்ட்ரியா ஜோடி முதல் பாதியில் கவர்ச்சியாகவும், இரண்டாம் பாதியில் பயத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகளோடும் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். அதற்கு இணையாக அதுல் குல்கர்னி தனக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். மகளில் நிலையைக் கண்டு அவர் பதறும் இடத்திலெல்லாம் கலங்க வைக்கிறார்.

ஜென்னி கதாப்பாத்திரத்தில் மகளாக நடித்திருக்கும் அனிஷா ஏஞ்சலினா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.

அதேவேளையில், மனநல மருத்துவராக வரும் சுரேஷ், பாதிரியார் கதாப்பாத்திரத்தில் வரும் நடிகர், வில்லனாக வரும் சீன நடிகர் என அனைவரின் நடிப்பும் தத்ரூபம். இமாச்சலப் பிரதேசத்தில் கதை நடப்பதால், பல கதாப்பாத்திரங்கள் அம்மொழியிலேயே பேச அதனை தமிழ்ப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கின்றது.

aval-movie-review-cover-39ஷிரியாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கிரிஷின் பின்னணி இசையும் படத்திற்குப் பக்க பலம் சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, அந்த பங்களா, அதன் அறைகள், மலை உச்சிகள், ஆள் அரவமற்ற சாலைகள் என ஒவ்வொன்றும் ரசிகர்களின் பயத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் காரணம் மட்டும் தான் கொஞ்சம் பழைய தெரிந்த பாணியாக இருக்கின்றது.

மற்றபடி,  ‘அவள்’ – நீண்ட நாட்களுக்குப் பிறகு இருக்கையில் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் ஒரு பேய் படம்.

-ஃபீனிக்ஸ்தாசன்

Comments