ஹராரே – ஜிம்பாப்வே நாட்டை கடந்த 37 ஆண்டுகளாக தனது சர்வாதிகாரப் பிடியில் வைத்திருந்து ஆண்டதுடன், அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த அதிபர் ரோபர்ட் முகாபே, இராணுவம் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை பதவி விலகினார்.
நேற்று கூடிய ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில், அவைத் தலைவர் 93 வயதான முகாபேயின் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையில் வாசித்தார்.
முகாபேக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிபராகப் பதவி வகித்த எம்மர்சன் மெனாங்காக்வா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்மர்சனை துணை அதிபர் பதவியிலிருந்து முகாபே நீக்கியதைத் தொடர்ந்து இராணுவப் புரட்சி வெடித்ததோடு, பொதுமக்களின் எதிர்ப்புகளும் பரவலாக எழுந்தன.