கோலாலம்பூர் -மலேசியாவில் தமிழில் நவீன நாடகத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஒரு மனிதராகப் போராடித் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டு, பின்னர் திரைப்படத் துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர் கலைஞர் எஸ்.டி.பாலா.
அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும், அவரது கலையுலகப் போராட்டத்தையும் விவரிக்கும் அவரது வாழ்க்கை வரலாற்றை ஜெ. இந்துஜா ஜெயராமன் தொகுத்து எழுதியுள்ளார்.
“எஸ்.டி.பாலாவின் கலைப் பயணம்” என்ற அந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த வியாழக்கிழமை 23 நவம்பர் 2017-ஆம் நாள் மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா. “இந்நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் ம இ கா மாதந்தோறும் ஓர் எழுத்தாளரை அடையாளங் கண்டு அவரது படைப்பை வெளியிடுவதோடு அவருக்கு சன்மானமும் வழங்கி வருகிறது. அது போல இந்நாட்டில் கலைத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களையும் கௌரவிப்பது குறித்து ம இ கா ஆராயும்” எனத் தெரிவித்தார்.
ம இ கா அன்று தொட்டு இன்று வரை மலேசியக் கலைஞர்களை ஆதரித்து வருகிறது எனினும் மாதந்தோறும் ஒரு கலைஞரை கௌரவிப்பதன் வழி அவர்களுக்கு உதவ முடியும் என டாக்டர் சுப்ரா நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நாட்டின் தமிழ் மேடை நாடகம் குறித்துப் பேசிய டாக்டர் சுப்ரா “சினிமா மற்றும் சின்னத் திரையின் வரவு காரணமாக பல்வேறு சவால்களைக் கண்டு நலிவடைந்த போதுதான் அதற்கு அப்போது இளைஞராக இருந்த எஸ்.டி. பாலா அதில் முழு ஈடுபாடு காட்டினார். அவரது படைப்புகள் சமூகச் சீர்திருத்த கருத்துகளை மையமாக கொண்டிருந்தன. அதனால் அவரது படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது” என டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.
மேடை நாடகத்தின் வழி சமூக உருமாற்றுக் கருத்துகளை எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்பதால் எஸ். டி. பாலா இதுகுறித்து ஆராய வேண்டும் எனவும் டாக்டர் சுப்ரா தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில், டத்தோ சரவணன், செடிக் தலைமை இயக்குநர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன், ‘தென்றல்’ வார இதழின் ஆசிரியர் வித்யாசாகர் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ். கே. தேவமணியும் கலந்து கொண்டார்.