கோலாலம்பூர் – மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பிலான வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியிருக்கும் தீர்ப்பு குறித்து ‘செல்லியல்’ தொடர்பு கொண்டபோது கருத்துரைத்த முன்னாள் பத்து தொகுதியின் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், “நாங்கள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்துடன் நடத்திய பேச்சு வார்த்தைகளின் பயனாக, உறுதியளித்தபடி இந்த வழக்கிலிருந்து நாங்கள் வாபஸ் பெற்றுக் கொண்டோம்” என்று தெரிவித்தார்.
“எங்களைப் பொறுத்தவரையில் கட்சிக்கு வெளியில் நிற்கும் எல்லாக் கிளைகளையும் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நிபந்தனையின் அடிப்படையில்தான் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதன்படி நாங்கள் தொடுத்திருந்த வழக்கையும் நாங்கள் மீட்டுக் கொண்டோம். மற்றபடி எந்தவித நோக்கமும் எங்களுக்கு இல்லை” என்றும் இராமலிங்கம் செல்லியலிடம் தெரிவித்தார்.
சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்த எண்மரில் இராமலிங்கமும் ஒருவராவார். முதலில் ஐவர் இந்த வழக்கிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்ள இராமலிங்கம், டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசீர்வாதம், டத்தோ இராஜூ ஆகிய மூவர் மட்டும் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றம் வரை இந்த வழக்கை நடத்தி வந்தனர்.
எனினும், இந்த வழக்கு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் வருவதற்கு முன்பாகவே, மூவரும் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அவசியம் இருப்பதாகக் கருதியதால் தங்களின் வழக்கறிஞர் குழு வழக்கின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்தில் நடத்தி இன்றையத் தீர்ப்பைப் பெற்றதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.