Home இந்தியா சாகித்திய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு!

சாகித்திய அகாடமி விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு!

1192
0
SHARE
Ad
ingulab-poet-deceased-feature
மறைந்த மக்கள் கவிஞர் இன்குலாப்

சென்னை – தமிழ் இலக்கிய உலகில் மதிப்புமிக்க விருதாகவும், ஓர் இலக்கியப் படைப்பாளிக்கான மகுடமாகவும் கருதப்படுவது இந்திய அரசாங்கத்தால் மொழி வாரியாக வழங்கப்படும் சாகித்திய அகாடமி விருதாகும். 2017-ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சாகித்திய அகாடமி விருது மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் அந்த விருதைப் பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதற்கொண்டு பல்வேறு சமூகப் போராட்டங்களில் முன்னின்று ஈடுபட்டதோடு, தனது கவிதைக் கனல்களால் தமிழ் மொழிக்கு எழுச்சியும், இன உணர்வும் ஊட்டியவர் இன்குலாப். அதன் காரணதாக மக்கள் கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர்.

தன் வாழ்நாளிலேயே தனக்கென எந்த விருதையும் நாடாதவர் – விரும்பாதவர் இன்குலாப். அவர் வாழும் நாளில் விருதுகள் குறித்து அவர் வெளியிட்ட  சில கருத்துகளை அவரது நண்பர்கள் சிலர் முகநூல் பக்கங்களில் பதிவிட்டிருக்கின்றனர். அவற்றில் சில:-

’’ எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன்.’’
#TamilSchoolmychoice

***
‘’அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்.
அதற்கும் மேலே
என் பேனா அழுந்துகையில்
எழுத்தாளன் எவனுக்கும்
கிடைக்காத பரிசு
இந்திய மண்ணில்
எனக்கு நிச்சயம்.‘’

***
‘’விருதுகள் கௌரவப்படுத்தும்
பிணமாக வாழ்ந்தால்
என் போன்றோரை…’’

***

இன்குலாப் அவர்களின் இலட்சியத்தை தொடர்வதற்கு முடிவு செய்துள்ள அவரது குடும்பத்தினர் அவருக்கு அளித்த சாகித்திய அகாடமி விருதை
வேண்டாம் என மறுத்திருக்கிறார்கள்.

“அரசு முகங்கள் மாறலாம். ஆனால் அவை அணிந்திருக்கும் முகமூடி ஒன்றே. அடக்குமுறையும், இனவாதமும், வர்க்கபேதமும், வன்முறையும் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. விமர்சிப்பவர்கள், எதிர்ப்பவர்களை எல்லாம் படுகொலை செய்யும்
இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக் கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும். இன்குலாப்பிற்கு அனைத்து இருட்டடிப்புகளையும் தாண்டி பரவலான மக்கள் வாசக வட்டம் உண்டு. அதுவே அவருக்கு ஒப்புகையாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும்.
இன்குலாப் அவர்களின் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை…” என்ற வாசகங்களுடன் இன்குலாப் குடும்பத்தினர் சாகித்திய அகாடமி விருதை மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக இன்குலாப்பின் மகள் ஆமீனா, சாகித்ய அகாடமியின் இயக்குநருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என ஆனந்த விகடன் இணையத் தளம் தெரிவித்தது.

அந்தக் கடிதத்தில், ‘கவிஞர் இன்குலாப் குரலற்றவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அறியப்பட்டவர். அவருக்கான அங்கீகாரம் என்பது மக்கள் கவிஞர் என்பதாகவே இருக்கும். அரசு அளிக்கும் இதுபோன்ற அங்கீகாரங்களை அவரை தேசிய அளவில் கொண்டு சேர்க்கும். ஆனால், கவிஞர் இன்குலாப், தன் வாழ்நாளில் அரசு வழங்கிய எந்த விருதையும் ஏற்றுக்கொண்டதில்லை.`விருதுகளையும் கௌரவங்களையும் எதிர்பார்த்து நான் எழுதுவதில்லை’ என்பார். அரசின் முகங்கள் மாறியிருக்கலாம். ஆனால், அது ஒரே முகமூடியையே அணிந்திருக்கிறது. இன்றையச் சூழலில் வன்முறைகள் ஊக்கமாக நடக்கின்றன. அதேபோல் வகுப்புவாதம், மதவாதம் மற்றும் ஒடுக்குதல் போன்றவையும் நடக்கின்றன. கவிஞர் இன்குலாபின் படைப்புகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. அதுவே ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். அந்தவகையில், கவிஞர் இன்குலாபின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இந்த விருதை ஏற்றுக்கொள்வதில்லை என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்று ஆமினா குறிப்பிட்டுள்ளார்.

இன்குலாப் பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளையின் இயக்குநராகவும் மருத்துவர் ஆமீனா இருந்துவருகிறார்.