Home இந்தியா ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா!

ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் முயற்சியில் இந்தியா!

926
0
SHARE
Ad
zakir naik-file pic
ஜாகிர் நாயக்

புதுடில்லி – தற்போது மலேசியாவில் தங்கியிருப்பதாக நம்பப்படும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை அவரது சொந்த நாடான இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக வெளியுறவுத் துறைக்கான இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு எழுத்து மூலம் வழங்கிய பதில் ஒன்றில் வி.கே.சிங் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ‘சிவப்பு அறிவிப்பு’ (red corner notice) பதிவு செய்ய வேண்டுமென இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் அமைப்புக்கு இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இண்டர்போல் நிராகரித்து விட்டது. ஜாகிர் மீது இதுவரையில் முறையான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்படவில்லை என்பதை தனது நிராகரிப்புக்கான காரணமாக இண்டர்போல் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

‘சிவப்பு அறிவிப்பு’ என்பது ஒரு குற்றவாளியை மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்வதிலிருந்து தடை விதிக்கும் அறிவிப்பாகும். சிவப்பு அறிவிப்பு கொண்டிருக்கும் நபர் எந்த நாட்டில் நுழைந்தாலும் கைது செய்யப்பட்டு இண்டர்போல் அமைப்பிடமோ, சம்பந்தப்பட்ட அரசாங்கத் தரப்புகளிடமோ ஒப்படைக்கப்படுவார்.

ஜாகிர் நாயக் மீதான புலன் விசாரணையை மேற்கொண்டு வரும் தேசியப் புலனாய்வுத் துறை, ஜாகிரை நாடு கடத்துவதற்கான விண்ணப்பத்தை  மும்பையில் இயங்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்றும் வி.கே.சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் குற்றவாளிகளை நாடு கடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கின்ற காரணத்தால், இந்த நடைமுறைகள் நிறைவடைந்ததும், ஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரும் விண்ணப்பம் முறையாக மலேசிய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிங் அறிவித்திருக்கிறார்.

ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடத் தகுதி 5 ஆண்டுகளுக்கு முன்பே  வழங்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி அறிவித்தார்.