Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘சக்க போடு போடு ராஜா’ – கலகலப்பான படம்! எதிர்பார்த்த புதுமை இல்லை!

திரைவிமர்சனம்: ‘சக்க போடு போடு ராஜா’ – கலகலப்பான படம்! எதிர்பார்த்த புதுமை இல்லை!

1392
0
SHARE
Ad

sakka podu podu rajaகோலாலம்பூர் – கச்சிதமாக வெட்டப்பட்ட தலைமுடி, திருத்தமாக ஒதுக்கப்பட்ட தாடி மீசை, பல மாதங்களாக முறையான சதவிகித உணவுகள் எடுத்துக் கொண்டதற்கு ஆதாரமாக தொப்பை நீங்கிய உடற்கட்டு என கதாநாயகனுக்கே உரிய தோரணையுடன் பளிச்சென இருக்கிறார் சந்தானம்.

காமெடி நடிகராக இருந்து 4 வது முறையாக கதாநாயகன் அவதாரம் எடுக்கிறோம். எனவே அதற்கேற்ப தோற்றம் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து சந்தானம் தன்னைத் தானே முழுமையாக செதுக்கியிருப்பது படம் முழுவதும் நன்றாகத் தெரிகின்றது.

ஆனால், தோற்றத்தில் இவ்வளவு கவனம் செலுத்திய சந்தானம், அதற்கேற்ப கதையும், திரைக்கதையும் தேர்ந்தெடுத்திருக்கிறாரா? சேதுராமன் இயக்கத்தில் ‘சக்க போடு போடு ராஜா’ படம் எப்படி இருக்கிறது? பார்போம்.

#TamilSchoolmychoice

SakkaPoduPoduRajaசந்தானத்தின் நண்பரான சேது, ரௌடியான சம்பத்தின் தங்கையை காதலிக்க, அக்காதலை சேர்த்து வைக்கிறார் சந்தானம். இதனால் சம்பத் சந்தானத்தின் மீது பகைமை கொள்கிறார்.

சென்னையில் இருந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்பதால், பெங்களூர் செல்லும் சந்தானம் அங்கு நாயகி வைபவி சந்தியாலாவைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.

காதலிக்கும் போது தான் தெரிகிறது. வைபவியின் அண்ணனும் ஒரு மிகப் பெரிய ரௌடி என்று. அது மட்டுமின்றி காதலி வைபவிக்கும் ஒரு கும்பலால் ஆபத்து இருப்பதையும் அறிகிறார்.

Santhanam-Sakka-Podu-Podu-Raja-Movie-Stills-3நண்பனின் காதலால் ஏற்பட்ட பிரச்சினை, தனது காதலிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை, காதலியின் அண்ணனால் தனக்கு வரும் பிரச்சினை என மூன்று பிரச்சினைகளையும் ஹீரோ சந்தானம் எப்படி சமாளிக்கிறார்? என்பதே படத்தின் சுவாரசியம்.

கதை ஏற்கனவே தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி ஹீரோக்கள் பலர் அரைத்து சக்கையாக்கிப் போட்டது என்பதால் அடுத்தடுத்து வரும் காட்சிகளை ரசிகர்கள் யூகித்துவிடுவது படத்தின் மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது. என்றாலும் திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து அதை புதிதாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகன் அவதாரம் என்று எடுத்த பிறகு, சந்தானத்தின் தோற்றத்தில் எப்படி வித்தியாசம் பார்க்கிறோமோ? அதேபோல் உடல்மொழியிலும், வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் இருக்க வேண்டாமா? ஒரே அடியில்  எதிரிகளைப் பறக்கவிட்டுப் பந்தாடும் ஹீரோ சந்தானம், சக காமெடியன்களுடன் வரும் காட்சிகளில் மீண்டும் காமெடியன் சந்தானமாகவே தெரிவது நெருடுகிறது. ஆனால், நடனத்தில் நல்ல முயற்சி.மிகவும் ரசிக்க வைக்கிறார்.

Spprவிவேக்கின் காமெடிக் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சில காட்சிகளில் அதே பழைய சரக்கு இருப்பதால் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.

அதேபோல், பவர் ஸ்டார், ரோபோ ஷங்கர், விடிவி கணேஸ், மயில்சாமி என ஒரு காமெடிப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. என்றாலும் சிரிக்க வைக்க சிரமப்படுகிறார்கள்.

கதாநாயகி வைபவி.. அழகாக இருக்கிறார்.. முகபாவனைகள் ஈர்க்கிறது. ஆனால் அவரது கதாப்பாத்திரத்தை சும்மா வந்து போகும் படியாக அமைத்திருப்பது ஏனோ?

அதேபோல், சம்பந்த், சரத் லோகிதாசா என இரு பெரும் வில்லன்கள் இருந்தும் அவர்களது கதாப்பாத்திரங்களை இன்னும் மிரட்டலாக அமைத்திருக்கலாம்.

இப்படியாகப் பல இடங்களில் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த விசயங்கள் இல்லாமல் போவதாலும், குறைவாக இருப்பதாலும் லேசான அதிருப்தி தான் ஏற்படுகிறது.

ஆனால், காதலிப்பவர்கள் தங்களின் குடும்பத்தினரின் சம்மதத்தோடு திருமணம் செய்வது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை சொல்லியிருப்பதில், பிரச்சினைகளை எப்படி தீர்த்து வைக்கலாம் என்பதைச் சொல்லியிருப்பதில் இயக்குநர் சேதுராமன் கவர்கிறார்.

இதே கதையை லாஜிக் மீறல்களைத் தவிர்த்து, இன்னும் எளிமையாக நகர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

அபிநந்தனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கதைக்கு ஏற்ப இருக்கின்றன. எஸ்டிஆர் பின்னணி இசை சுமார் இரகம். பாடல்களில் காதல் தேவதை, கலக்கு மச்சான் கேட்கும் இரகம்.

மொத்தத்தில், ‘சக்க போடு போடு ராஜா’ – குடும்பத்தோடு பார்க்க கலகலப்பான படம்! என்றாலும் எதிர்பார்த்த புதுமை இல்லை!

கதாநாயகனாக முழு தகுதியிருக்கும் சந்தானம்.. அடுத்த முறை கதையின் நாயகனாக இருக்கும்படியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தன்னை முழுமையாக இயக்குநரிடம் ஒப்படைத்துவிட்டு நடித்தால் நிச்சயமாக முன்னணி ஹீரோக்கள் வரிசையில் ஒரு இடம் கிடைத்துவிடும்.

-ஃபீனிக்ஸ்தாசன்