கோலாலம்பூர் – எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், துணைப் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பது சிலாங்கூர் மாநில பிகேஆர் தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் சிலாங்கூர் பிகேஆர் மட்டுமல்ல, ஜசெக, அமனா, பெர்சாத்து ஆகிய கட்சிகளிலும் இருவேறு கருத்துகள் நிலவி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பிகேஆர் துணைத்தலைவர் டத்தோ அஸ்மின் அலியையும், பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரையும் பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் வேட்பாளராக நியமித்திருக்கலாம் என சிலாங்கூரில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் பலரின் கருத்தாக இருக்கின்றது.
ஆனால், இளம் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துவருவது சிலாங்கூர் எதிர்கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களை வருத்தமடையச் செய்திருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.