சென்னை – ஆண்டாளைப் பற்றி சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிப்பூத்தூர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மாலை, ஜீயர்கள், மடாதிபதிகள், சிவச்சாரியார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில், நடிகர் எஸ்.வி.சேகர், விசு, குட்டி பத்மினி உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
“பிழைப்பிற்காகப் பெண்களை வர்ணித்துப் பாட்டு எழுதும் வைரமுத்துவிற்கு தெய்வப்புலவர் ஆண்டாளை அவதூறு பேச எந்தத் தகுதியும் கிடையாது. வைரமுத்து தனது தவறை உணர்ந்து தனது கருத்திற்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்று அப்போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில், “எந்த ஒரு விளம்பரமுமோ, பதாகையோ இல்லாமல் முதல் முறையாக இப்படி ஒரு நோக்கத்திற்காக இவ்வளவு பேர் ஒன்று கூடியிருக்கின்றனர். மற்றவர்களுடைய நம்பிக்கைகளை அவதூறு பேச யாருக்கும் உரிமை கிடையாது. வைரமுத்து தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.