
ஜோகூர் பாரு – இன, மத பேதமின்றி ஜோகூர் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாசாய் ஸ்ரீ ஆலாம் வட்டாரத்தில் உடைபட்ட தேவிஸ்ரீ சிவசக்தி ஸ்ரீ சின்னகருப்பர் ஆலய விவகாரத்தில் சமாதானத் தூதுவராகச் செயல்பட பெருமனதுடன் முன்வந்தார்.
இந்த ஆலயம் கடந்த 80-ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்தில் வீற்றிருந்தது. அண்மையில் மாநில அரசு அதிகாரிகளால், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன.
ஆலய நிர்வாகத்தினரையும், சம்பந்தப்பட்ட தரப்பினரையும் புக்கிட் பெலாங்கி அரண்மனைக்கு நேரில் அழைத்து நேற்று பேச்சு வார்த்தை நடத்திய ஜோகூர் சுல்தான், இந்த ஆலய சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தானே நேரடியாகத் தலையிட்டு மாற்று இடம் உடனடியாக வழங்கப்படுவதையும், ஆலயம் மீண்டும் நிர்மாணிக்கப்படுவதையும் உறுதி செய்யப் போவதாகத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது ஜோகூர் சுல்தானின் புதல்வர் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டாரும் உடனிருந்தார்.
ஆலயத்தின் இடமாற்றத்திற்கும், மறு நிர்மாணிப்புக்கும் ஜோகூர் சுல்தான் 1 இலட்சம் ரிங்கிட் நன்கொடை வழங்குவதாகவும், துங்கு இட்ரிஸ் 70,000 ரிங்கிட்டும் வழங்குவதாக ஆலய நிர்வாகத்தினரிடம் உறுதியளித்தனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தப் பிரச்சனை சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுல்தான் கேட்டுக் கொண்டார். எதிர்பாராதவிதமாக நடந்து விட்ட இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை இனியும் யாரும் தேவையின்றி பெரிதாக்க வேண்டாம் என்றும் ஜோகூர் சுல்தான் கேட்டுக் கொண்டார்.
ஜோகூர் சுல்தான் ஆலய நிர்வாகத்திடம் நடத்திய இந்தச் சந்திப்பின்போது ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர்.வித்தியானந்தனும் உடனிருந்தார்.
ஒரு தனியார் நிலத்தில் இந்த ஆலயம் சட்டவிரோதமாக அமைந்திருந்ததாக, அந்த நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றதை அடுத்து சின்னகருப்பர் ஆலய நிர்வாகத்தினரிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மாநில அரசு அதிகாரிகளால் கடந்த ஜனவரி 11-ஆம் இந்த ஆலயம் உடைக்கப்பட்டது.
படம், தகவல்: நன்றி – ஜோகூர் சுல்தான் ஊடக அலுவலகம்