Home இந்தியா 20 டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் – அதிபர் ஒப்புதல்!

20 டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் – அதிபர் ஒப்புதல்!

822
0
SHARE
Ad
arvind-kejriwal
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடில்லி – டில்லி மாநிலத்தை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முடிவுக்கு இந்திய அதிபர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

தங்கள் தரப்பு வாதங்களையும் நியாயங்களையும் அதிபர் செவிமெடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்காமல் ராம்நாத் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறும்.

#TamilSchoolmychoice

70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி தற்போது 48 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தடையுத்தரவு கோரி ஆம் ஆத்மி தொடுத்துள்ள வழக்கு இன்று திங்கட்கிழமை டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. டில்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவை மறு உறுதிப்படுத்துமா அல்லது தடை செய்யுமா என்ற பரபரப்பும் டில்லி வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய உயர் நீதிமன்ற முடிவு தேர்தல் ஆணையத்துக்கு சாதகமாக அமையுமானால், அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும்.

இந்த முறை இந்தத் தொகுதிகளைக் கைப்பற்ற மத்தியில் ஆளும் பாஜகவும், காங்கிரசும் கடுமையாகப் போராடும். இந்த 20 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவை வைத்துத்தான் டில்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி தொடருமா அல்லது ஆட்டம் காணுமா என்பது தெரிய வரும்.