மின்னஞ்சல் முகவரிகள் தமிழில் அமைவதற்கு வாய்ப்பில்லையா?
தமிழ் மின்னுட்ப ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வரும் கேள்வி இது. எடுத்துக்காட்டாக, mani@inaiyam.com என்னும் முகவரியைப் போலவே, மணி@இணையம்.காம் என்னும் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் சரியாகப் போய் சேர வேண்டும்.
தமிழ் மின்னஞ்சல் முகவரிகளுக்கு இணையான ஆங்கில முகவரி இல்லாமலேயே மின்னஞ்சல் பட்டுவாடா முறையாக நடக்க வேண்டும். இனி அது நடக்கும்!
உலகத் தாய்மொழி நாளை ஒட்டி, தமிழ் உட்பட, 15 இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தலாம் என்று மைக்குரோசாப்ட் நிறுவனம் புதன்கிழமை (பிப்பிரவரி 21ஆம் நாள்) அறிவித்தது.
செயலிகள்
மைக்குரோசாப்டின் ஆபிஸ் 365, அவுட்லூக், எக்சுச்சேன்ஜ் போன்றச் செயலிகளில் மின்னஞ்சல் முகவரிகளைத் தமிழிலும் அறிவிக்கப்பட்ட மற்ற இந்திய மொழிகளிலும் பயன்படுத்தலாம். இந்தி, போடோ, தோக்கிரி, கொன்காணி, மைதிலி, மராத்தி, நேப்பாளி, சிந்தி, பெங்காளி, குஜராத்தி, மணிப்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளே, இந்த முதற்கட்டப் பயன்பாட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மொழிகள்.
அனைத்துலக இணையப் பெயர்கள், மற்ற இந்திய மொழிகளிலும் செயல்படும்போது அந்த மொழிகளும் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் மைக்குரோசாப்ட் அறிவித்தது.
விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும் கணினிகளில் மட்டுமல்லாமல், ஐஓஎஸ், ஆண்டிராய்டு திறன்கருவிகளில் இயங்கும் செயலிகளிலும், இந்த மொழிகளில் அமைந்த முகவரிகளைக் கொண்டு, மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் செய்யலாம்.
தமிழில் மின்னஞ்சல் முகவரிகளை அமைப்பதற்கு முதலில் தளப் பெயரை (domain name) தமிழில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான சேவையைச் சில இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இணையத் தளப் பெயர்களைத் தமிழிலும் மற்ற மொழிகளிலும் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்கனவே இருந்தாலும், மின்னஞ்சல்களை இந்தப் பெயர்களில் அனுப்புவதற்கானக் கட்டமைப்பு முழுமையாக அமையவில்லை. மைக்குரோசாப்ட் வழங்கி இருக்கும் இந்த வசதி, தமிழில் தளப்பெயர்களின் பயன்பாடும் மின்னஞ்சல் முகவரிகளின் பயன்பாடும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்போம்.
முன்பு இணையத்தில் தமிழ் என்று கேட்டோம். இனி தமிழில் இணையம் என்று கேட்போம்!
இணைப்பு:1. Support for email addresses in Indian languages