
புதுடில்லி- (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) இன்று சென்னையில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஜ அதிகாரிகளால் புதுடில்லி கொண்டு செல்லப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவரது தந்தையும், முன்னாள் இந்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவசரமாக இலண்டனிலிருந்து நாடு திரும்புகிறார்.

இலண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருக்கும் சிதம்பரம் தனது நிகழ்ச்சிகளை இரத்து செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்புகிறார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் விரைவில் புதுடில்லி வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது புதுடில்லியிலுள்ள சிபிஐ நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் கார்த்தி சிதம்பரத்தை 15 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ விண்ணப்பித்துள்ளது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் இந்த விண்ணப்பத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி வருகின்றனர்.
கார்த்தி சிதம்பரத்தின் தாயாரும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், தனது மகன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே உடனடியாக புதுடில்லி புறப்பட்டுச் சென்றார்.
கார்த்தி சிதம்பரத்தை தடுப்புக் காவலில் வைக்கக் கோரும் விண்ணப்பம் மீதான வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது தந்தை சிதம்பரத்தை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான் தான் கைது செய்யப்பட்டிருப்பதாக கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.