Home நாடு சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக வழக்கு தொடுக்க பக்காத்தானுக்கு அனுமதி

சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராக வழக்கு தொடுக்க பக்காத்தானுக்கு அனுமதி

756
0
SHARE
Ad
நீதிமன்றத்தில் பக்காத்தான் தலைவர்கள் – படம் : நன்றி – பிஎப்எம் டுவிட்டர் பக்கம்

கோலாலம்பூர் – தங்களின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியைப் பதிவு செய்ய சங்கப் பதிவிலாகா தவறியதைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியைப் பதிவு செய்ய சங்கப் பதிவிலாகாவை முடிவெடுக்கக் கோரும் வழக்கை பக்காத்தான் ஹரப்பான் நடத்துவதற்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நீதிபதி அசிசா நவாவி இந்தத் தீர்ப்பை வழங்கியதாக பக்காத்தான் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்களில் ஒருவரான கோபிந்த்சிங் டியோ தெரிவித்தார். கோபிந்த் சிங் டியோ ஜசெகவின் துணைத் தலைவருமாவார்.

14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் இறுதி முடிவு பொதுத் தேர்தல் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

சங்கப்  பதிவிலாகாவைப் பிரதிநிதித்த அரசாங்க வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்வதற்கு எதிராக எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபணைகளைத் தொடர்ந்து தங்களின் விண்ணப்ப ஆவணங்களில் பக்காத்தான் வழக்கறிஞர்கள் சில திருத்தங்களைச் செய்துகொள்ள நீதிமன்றம் அனுமதித்தது.

சங்கப் பதிவிலாகாவுக்கு எதிரான பக்காத்தானின் வழக்கு ஒரு சீராய்வு மனு (judicial review)  என்பதால், இந்த வழக்கு தொடர்வதற்கு முன்னால் முதலில் நீதிமன்றத்தின் முன்அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். அந்த முன் அனுமதியைப் பெறுவதற்கான வழக்கு விசாரணைதான் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தற்போது இந்த வழக்கின் நிர்வாகம்  (case management) தொடர்பான விசாரணை எதிர்வரும் மார்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால் வழக்கைத் துரிதமாக முடிக்க தாங்கள் அனத்து முயற்சிகளையும் எடுக்கப் போவதாகவும் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

நீதிமன்றம் வழக்கின் கீழ்க்காணும் இரண்டு அம்சங்களை இனி விசாரிக்கும்:

1) கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி பக்காத்தான் ஹரப்பான் சமர்ப்பித்த கூட்டணி அமைக்கும் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு அனுமதியளிக்க சங்கப் பதிவிலாகாவுக்கு உத்தரவிட வேண்டும்.

2) அல்லது, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை சங்கப் பதிவிலாகா முறையாகப் பதிவு செய்ய வேண்டும்.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் பக்காத்தானின் முன்னணித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.