Home நாடு நாடாளுமன்றத்தில் இது தான் எனது கடைசி பேச்சு – ரபிசி உருக்கம்!

நாடாளுமன்றத்தில் இது தான் எனது கடைசி பேச்சு – ரபிசி உருக்கம்!

917
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிகேஆர் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரபிசி ரம்லி, நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, இது நாள் வரையிலான தனது விமர்சனங்களுக்காக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

“நாடாளுமன்றத்தில் எனது கடைசி உரை இது. அடுத்த பொதுத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, புண்படும்படியான எனது கடுமையான விமர்சனங்களுக்காக மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். அதனை நான் வெறுப்பினால் என்றுமே செய்ததில்லை.”

“அரசாங்கத்தின் கொள்கைளால் மக்களுக்கு சிரமம் ஏற்படும் போது அவர்களின் சார்பாக விமர்சனங்களைத் தெரிவிப்பது எனது கடமை. தேசிய முன்னணியைச் சேர்ந்த பங் மொக்தார் ராடின், நகர நலன், வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அரசாங்க அமைச்சர் நோ ஓமார் போன்றவர்கள் எனக்கு நல்ல நண்பர்களும் கூட” என நாடாளுமன்றத்தில் ரபிசி உருக்கமாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

என்எஃப்சி (National Feedlot Corporation) ஊழல் தொடர்பான இரகசிய வங்கி ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிசி ரம்லிக்கு அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7- தேதி, 30 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அரசியல் சாசனத்தின் படி, ஓராண்டுக்கு மேலாக சிறைத் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரபிசி இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.