கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோ லோ மற்றும் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோரின் முதல் கணவரின் மகன் ரிசா அசிஸ் இருவரும் மலேசியாவில் எந்த வருமானமும் பெற்றதாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என இரண்டாவது நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனவே, அவர்கள் இருவர் மீதான வருமான வரி ஆவணங்கள் எதுவும் வருமான வரி இலாகாவிடம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிகாம்புட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் ஜொஹாரி இவ்வாறு தெரிவித்தார். அவர்கள் இருவரும் மலேசியாவில் தாங்கள் வருமானம் பெற்றதாக ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தால், அதற்கான வரிவிதிப்பை வருமான வரி இலாகா கையாண்டிருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
1எம்டிபி விவகாரத்தில் ஜோ லோ பெரும் பங்காற்றினார் என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் ‘இக்குனாமிட்டி’ என்ற உல்லாச ஆடம்பரப் படகு அண்மையில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறையினரால் இந்தோனிசியாவின் பாலித் தீவு அருகில் கைப்பற்றப்பட்டது.
ரிசா அசிஸ் அமெரிக்காவில் ஆங்கிலப் படங்களைத் தயாரிக்கும் ‘ரெட் கிரானைட்’ நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 1எம்டிபியின் பணத்தை முறைகேடான முறையில் பெற்றது என அமெரிக்கா அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து 60 மில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்க அரசாங்கத்திடம் செலுத்த ரிசா அசிஸ் அண்மையில் ஒப்புக் கொண்டார்.