Home உலகம் எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விமானி தற்கொலை!

எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விமானி தற்கொலை!

1219
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய விமானம் எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவால் குற்றம்சாட்டப்பட்ட உக்ரைன் விமானி கேப்டன் விளாடிசிலாவ் வோலோசின் (வயது 29), கடந்த ஞாயிற்றுக்கிழமை, மைகோலைவ் பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வோலோசின் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், சம்பவம் நடந்த அன்று, அவரது அறையில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது வோலோசின் இறந்து கிடந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருப்பதாக பிபிசி செய்தி கூறுகின்றது.

வோலோசினின் மரணம் தற்கொலை எனக் கூறப்பட்டாலும் கூட, உக்ரைன் காவல்துறை இதனை திட்டமிட்ட கொலை என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் பிபிசி செய்தி குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ம் ஆண்டு, கிழக்கு உக்ரைன் வான்பரப்பில் 298 பேருடன் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய விமானம் எம்எச்17, மர்ம ஏவுகணை தாக்கி வெடித்துச் சிதறியது. இதில் அவ்விமானத்தில் இருந்த 298 பேரும் மரணமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், விமானத்தை வீழ்த்திய ஏவுகணை ரஷியாவுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

ஆனால், ரஷியா அதனை மறுத்ததோடு, விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் விமானியான வோலோசின் தான் எனக் குற்றம்சாட்டியது.

வோலோசின் கடந்த 2014-ம் ஆண்டு இலோவாய்சிக் போரில் திறம்பட செயல்பட்டு உக்ரைனால் வீரப்பதக்கம் வழங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.