Home நாடு மூவார்: துணையமைச்சரைத் தோற்கடிப்பாரா சைட் சாதிக்?

மூவார்: துணையமைச்சரைத் தோற்கடிப்பாரா சைட் சாதிக்?

1031
0
SHARE
Ad
ரசாலி இப்ராகிம் – மூவார் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமர் துறை துணையமைச்சர்

மூவார் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலம் பல்வேறு நட்சத்திரப் போட்டியாளர்களின் களமாகத் திகழப் போகிறது என்பது அடுத்தடுத்து உறுதியாகி வருகிறது.

ஆயர் ஈத்தாமில் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் – ஜசெகவின் லியூ சின் தோங் ஆகிய இருவருக்கும் இடையிலான போட்டி அறிவிப்பைத் தொடர்ந்து, மூவார் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் பிரதமர் துறையின் துணை அமைச்சருமான ரசாலி இப்ராகிமிற்கு எதிராக சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் களமிறங்குவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது.

சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான்

இறுதி நேர அத்தியாவசிய மாற்றங்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் பெர்சாத்து கட்சியின் 25 வயது நிரம்பிய இளைஞர் தலைவரும், அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகப் பட்டதாரியுமான சைட் சாதிக் மூவார் தொகுதியில் பக்காத்தான் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

#TamilSchoolmychoice

இந்தத் தொகுதியில் கடந்த 2013 பொதுத் தேர்தலில் 1,646 வாக்குகள் வித்தியாசத்தில்தான் பிகேஆர் வேட்பாளரைத் தோற்கடித்து ரசாலி இப்ராகிம் வெல்ல முடிந்தது.

சைட் சாதிக் மூவாரை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற சாதகமான அம்சத்தோடு, இளைய சமுதாயத்தினரிடையே மிகவும் பிரபலமான இளம் தலைவர்களில் ஒருவர், சமூக ஊடகங்களில் அதிகமாகப் பின்பற்றப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர் என மற்ற பல தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.

மூவார் நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

சுமார் 62 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 35 விழுக்காடு சீன வாக்காளர்களையும், 1 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்ட இந்தத் தொகுதியின் இனக் கலவையும் சைட் சாதிக்குக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு முதல் மூவார் தொகுதியை ரசாலி இப்ராகிம் தற்காத்து வருகிறார்.

மூவார் தொகுதியின் கீழ்வரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மஹாராணி மற்றும் சுங்கை லாலாங் ஆகும். இந்த இரண்டில் மஹாராணி தொகுதியில் 2013-இல் பக்காத்தான் கூட்டணி சார்பாகப் போட்டியிட்ட பாஸ் கட்சி வென்றது. சுங்கை லாலாங் தொகுதியை தேசிய முன்னணி வென்றது.

எனவே, மூவார் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சியும் தனது வேட்பாளரைக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.