சென்னை – வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் காரணமாக, தென்னிந்திய சினிமா உலகம் கடந்த சில வாரங்களாக முடங்கிக் கிடக்கிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வரை, அனைத்துப் படப்பிடிப்புகளும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த முன்னணி நட்சத்திரங்கள் மிச்சமிருந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, குடும்பத்தினரோடு நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருப்பதால், அஜித் தனக்குப் பிடித்த ஏரோ மாடலிங் துறையில் மீண்டும் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்.
சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றிற்குச் சென்ற அஜித், அங்கு குவாட்காப்டர் என்ற சிறிய இரக விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறார்.
அஜித் ஏற்கனவே, கார் பந்தயங்கள், துப்பாக்கிச் சுடுதல், புகைப்படம் எடுப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தங்களது கல்லூரிக்கு அஜித் வந்திருப்பதை அறிந்த மாணவர்கள் அவருக்காக நீண்ட நேரம் காத்திருந்து அவரைச் சந்தித்தனர்.
அப்போது நடந்த உரையாடலின் போது, “சார்.. உங்களுக்காக 12 மணி நேரமா காத்திருக்கோம்” என்று மாணவர்கள் சொல்ல, “சாரிப்பா.. உங்களைச் சந்திக்க நான் 26 வருஷமா காத்திருக்கேன்” என்ற பதிலளித்து நெகிழ வைத்திருக்கிறார்.