கோலாலம்பூர் – வரும் ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருக்கும் காங்கிரசில், மலேசிய காற்பந்தாட்ட சங்கத்தின் (எஃப்ஏஎம்) தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதை டத்தோ ஹமிடின் முகமது அமின் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
மலேசிய காற்பந்து சங்கத்தின் 2017 – 2021 காலகட்டத்திற்கான செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஜோகூர் இளவரசர் துங்கு மாஹ்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் ராஜினாமா ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும், அடுத்த எஃப்ஏம் காங்கிரஸ் வரையில், துணைத் தலைவர் டத்தோ யூசோப் மகாடியை இடைக்காலத் தலைவராக நியமனம் செய்வதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கடந்த ஓராண்டாக எஃப்ஏஎம் தலைவராகச் செயல்பட்டு வந்த துங்கு இஸ்மாயில், அப்பதவியில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் 25-ம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனிடையே, எஃப்ஏம் தலைவராக ஹமிடின் போட்டியிடுவதற்கு அவரது சக உறுப்பினர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகின்றது.