இஸ்கண்டார் புத்ரி – மலேசியக் காற்பந்து சங்கத்தின் (எப்ஏஎம்) தலைவர் பதவியில் இருந்து ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் (டிஎம்ஜே) நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக விலகினார்.
நேற்று ஜோகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரியில் நடைபெற்ற எப்எம்எல்எல்பி (Football Malaysia Limited Liability Partnership) காங்கிரசில்,ஜோகூர் இளவரசர் தனது முடிவைத் தீர்க்கமாக அறிவித்தார்.
மேலும், வரும் ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருக்கும் காற்பந்து சங்கத்தின் 64-வது காங்கிரஸ் வரையில், இடைக்காலத் தலைவராக டத்தோ முகமது யூசோப் மகாடியை நியமனம் செய்யும் படியும், அதன் பின்னர், சங்கத்தின் தலைவராக எப்ஏஎம் செயலாளர் டத்தோ ஹமிடின் முகமது அமின் பொறுப்பேற்பார் என்றும் ஜோகூர் இளவரசர் பரிந்துரை செய்தார்.
நேற்று நடைபெற்ற இதே நிகழ்ச்சியில், மலேசிய காற்பந்து லீக் (எம்எப்எல்) என்று புதிய பெயர் மாற்றப்பட்டிருக்கும் எப்எம்எல்எல்பி அமைப்பின் தலைவராகவும் ஜோகூர் இளவரசர் நியமனம் செய்யப்பட்டார்.
காற்பந்து சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகப் போகும் முடிவை ஜோகூர் இளவரசர், கடந்த மார்ச் 15-ம் தேதியே, தனது வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
“இதுவரையில் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பு அனைத்துக்கும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். எனது மனைவிக்கும் குழந்தைக்கும்…தந்தை வீடு திரும்பிவிட்டேன்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஓராண்டாக இந்தப் பதவியை அவர் வகித்து வந்தார். கடந்த 2017, மார்ச் 25-ம் தேதி முதல் அவர் இந்தப் பதவியை அலங்கரித்து வந்தார்.
211 உறுப்பிய நாடுகளைக் கொண்ட உலகக் காற்பந்து சம்மேளனத்தில் மலேசியா பழைய நிலையிலிருந்து கீழிறங்கி 178-வது நிலையை அடைந்ததைத் தொடர்ந்து அதற்குப் பொறுப்பேற்று அவர் தனது பொறுப்பைத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.