Home உலகம் ஜோ லோ உல்லாசக் கப்பலின் அடுத்த பயணம் அமெரிக்கா நோக்கி!

ஜோ லோ உல்லாசக் கப்பலின் அடுத்த பயணம் அமெரிக்கா நோக்கி!

1453
0
SHARE
Ad
ஜோ லோவின் இக்குனாமிட்டி உல்லாசக் கப்பல்

லாஸ் ஏஞ்சல்ஸ் – இந்தோனிசியாவில் தற்போது அமெரிக்க அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், 1 எம்டிபி விவகாரத்தின் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ லோவுக்கு சொந்தமான ‘இக்குனாமிட்டி’ உல்லாசக் கப்பலின் அடுத்த பயணம் அமெரிக்காவை நோக்கிச் செல்வதாக இருக்கும்.

ஆனால், அது உல்லாசப் பயணமாக இருக்கப் போவதில்லை!

அந்த உல்லாசக் கப்பலின் உரிமை கொண்ட நிறுவனம், அந்தக் கப்பலைத் தாங்கள் விற்கப் போவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் விற்பனைத் தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த முடியும் என லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அந்த உல்லாசக் கப்பலை அமெரிக்கா கொண்டுவந்து அரசாங்கப் பாதுகாப்பில் வைத்திருக்கும்படி அந்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஜோ லோ என சுருக்கமாக அழைக்கப்படும் லோ தெக் ஜோ, “திருடப்பட்ட, முறைகேடாகப் பெறப்பட்ட” 1எம்டிபி பணத்தில்தான் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய, 300 அடி நீளமுள்ள, அந்த உல்லாசப் படகை வாங்கினார் என அமெரிக்க நீதித் துறை வலியுறுத்தி, அந்தப் படகை அமெரிக்காவின் பாதுகாப்பில் வைத்திருக்க நீதிமன்றத்தில் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இக்குனாமிட்டியின் உரிமையாளர் நிறுவனமான இக்குனாமிட்டி கேமேன் லிமிடெட் (Equanimity (Cayman) Ltd) அந்த விண்ணப்பத்திற்கு எதிரான மனு  ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில்தான் பல்வேறு காரணங்களைக் காட்டி, அந்த உல்லாசக் கப்பலைத் தாங்களே விற்கப் போவதாக இக்குனாமிட்டி நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனினும் இக்குனாமிட்டி நிறுவனத்தின் வாதங்களை நிராகரித்த நீதிபதி அந்த உல்லாசக் கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டுவரலாம் எனத் தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த உல்லாசக் கப்பல் அமெரிக்கா நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தக் கப்பலை அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது எனக் கூறி மற்றொரு விண்ணப்பத்தை அதன் உரிமையாளர்கள் இந்தோனிசிய நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றனர்.

அந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ஜாகர்த்தா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.