Home நாடு ஜோகூர் பாரு: “நான் தயார்! நீங்கள் தயாரா?” கிட் சியாங்கிற்கு ஷாரிர் சமாட் சவால்!

ஜோகூர் பாரு: “நான் தயார்! நீங்கள் தயாரா?” கிட் சியாங்கிற்கு ஷாரிர் சமாட் சவால்!

1084
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் டத்தோஸ்ரீ உத்தாமா ஷாரிர் அப்துல் சமாட், தன்னை எதிர்த்துப் போட்டியிடத் தயாரா என ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு சவால் விடுத்துள்ளார்.

ஜோகூர் பாரு நாடாளுமன்றத்தில் லிம் கிட் சியாங் போட்டியிடுவார் என ஆரூடங்கள் கூறப்பட்டாலும் தனது முடிவை அவர் இன்னும் அறிவிக்கவில்லை.

ஜோகூர் பாரு அரசியலோடு பின்னிப் பிணைந்த ஷாரிர் சமாட்

ஜோகூர் பாரு என்ற நகரின் பெயரோடும் அரசியல் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்தது ஷாரிர் சமாட் என்ற பெயர்.

#TamilSchoolmychoice

மலாயாப் பல்கலைக் கழகப் பட்டதாரி இளைஞராக – அப்போதைய அமைச்சர் (துன்) மூசா ஹீத்தாமின் அரசியல் செயலாளராக அம்னோ அரசியலில் கால் பதித்த ஷாரிர் சமாட், முதன் முறையாக  1978-ஆம் ஆண்டில் தனது 29-வது வயதில் ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அப்போதே 23,481 பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, கூட்டரசுப் பிரதேச அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் ஷாரிர். அந்த காலகட்டத்தில் மிக இள வயதில் முழு அமைச்சராகப் பதவி வகித்தப் பெருமையைப் பெற்றவர் அவர்.

அதன் பின்னர் 1982,1986-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வெற்றி பெற்ற ஷாரிர், 1987-88 ஆம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமரும் அம்னோ தலைவருமான மகாதீருக்கு எதிராக துங்கு ரசாலி-மூசா ஹீத்தாம் கூட்டணியில் உருவான தலைமைத்துவப் போராட்டத்தில் மகாதீருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.

இதைத் தொடர்ந்து 1988-ஆம் ஆண்டில் மகாதீருக்கு ஒரு சவால் விட்டார் ஷாரிர். “ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று வென்று காட்டுகிறேன், மகாதீருக்கும், அம்னோவுக்கும் செல்வாக்கு சரிந்து விட்டது என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்” என்ற சவால்தான் அது.

சொன்னதோடு நில்லாமல், ஜோகூர்பாரு நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பதவி விலகினார். அதன் காரணமாக, 25 ஆகஸ்ட் 1988-ஆம் நாள் நடைபெற்ற ஜோகூர் பாரு நாடாளுமன்றத்திற்கான இடைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார்.

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த அந்த இடைத் தேர்தலிலும் 12,613 வாக்குகள் பெரும்பான்மையில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஷாரிர்.

அதற்கு முன்னரும், ஏன் அதற்குப் பின்னரும் கூட அம்னோவில் யாரும் அத்தகைய சாதனையை நடத்திக் காட்டியதில்லை.

அரசியல் சாசனத்தையே திருத்திய ஷாரிரின் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

ஷாரிரின் சாதனை மகாதீரையும் வெகுவாகப் பாதித்தது. இறுதி வரை ஷாரிருக்கு அம்னோவில் தனது தலைமைத்துவக் காலத்தில் மகாதீர் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.

அது மட்டுமல்ல! அந்த சம்பவத்திற்குப் பின்னர்தான், ஒருவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற புதிய சட்டத் திருத்தத்தை 1990-ஆம் ஆண்டில் மலேசிய அரசியல் சாசனத்தில் கொண்டு வந்தார் மகாதீர்.

அதன்பின்னர் 1990 பொதுத் தேர்தலில் அவர் ஜோகூர் பாரு நாடாளுமன்றத்தில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். அந்தப் பொதுத் தேர்தலில் ஷாரிரின் சொந்த செயலாளரே ஜோகூர் பாரு நாடாளுமன்றத்தில் அம்னோ-தேசிய முன்னணி சார்பில் நிறுத்தப்பட்டார்.

அவர்தான் இன்றைய ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் (படம்). ஆம்! ஒரு வழக்கறிஞரான காலிட் நோர்டின், சிறிது காலம் பெட்ரோனாஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு, பின்னர் ஷாரிரின் செயலாளராகத்தான் தனது அரசியல் பயணத்தை அம்னோவில் தொடக்கினார்.

1990, 1995,1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து போட்டியிட்டு அந்தத் தொகுதியில் வென்றார் காலிட் நோர்டின்.

ஷாரிர் அம்னோவுக்கு மீண்டும் திரும்பினாலும், மகாதீர் தொடர்ந்து அம்னோ தலைவராக நீடித்ததால் ஷாரிருக்கு மீண்டும் ஜோகூர் பாருவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

படாவியின் வருகையால் மாறிய ஷாரிரின் தலைவிதி

ஆனால், 2003-இல் மகாதீர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அப்துல்லா படாவியின் (படம்) வருகை, ஷாரின் அரசியல் வாழ்க்கையிலும் வெளிச்சத்தைப் பாய்ச்சியது.

2004 பொதுத் தேர்தலில் மீண்டும் அதே ஜோகூர்பாரு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகப் போட்டியிட்டு, 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அந்தத் தொகுதியை வென்றார் ஷாரிர்.

தொடர்ந்து 2008, 2013 பொதுத் தேர்தல்களிலும் ஜோகூர் பாரு தொகுதியைத் தற்காத்துக் கொண்டார் ஷாரிர்.

இப்போதோ, பெல்டா அமைப்பின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றிருக்கும் அவர், பெல்டாவில் முன்வைக்கப்படும் பல்வேறு ஊழல் புகார்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமல்ல ஒருகாலத்தில் உண்மைக்கும், நியாயத்திற்கும் போராடுபவராக, இளைஞர் சமூகத்தினரிடையே பிரபலமாகப் பார்க்கப்பட்ட – பெரிதும் மதிக்கப்பட்ட ஷாரிர் – 1 எம்டிபி விவகாரத்தில் எந்தவிதக் கருத்தும் சொல்லாததும், நஜிப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவதும், அம்னோவுக்கு வெளியே அவருக்கிருந்த மதிப்பையும், செல்வாக்கையும் கணிசமாகக் குறைத்துவிட்டது என்றே கூறவேண்டும்.

எனவே, வரும் பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தை எதிர்க்கட்சிகளின் அரசியல் சுனாமி தாக்கிச் சுற்றிச் சுழன்றடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், ஷாரிர் மீண்டும் ஜோகூர் பாருவை வெற்றிகரமாகத் தற்காக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

மீண்டும் மகாதீர் – ஷாரிர் போராட்டம்

அதுமட்டுமல்ல! 1988-ஆம் ஆண்டில் மகாதீருக்கு எதிராக அம்னோவில் போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு தெரிவித்த ஷாரிர் சுமார் 30 ஆண்டுகள் கழித்து, அதே மகாதீர் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிலையில் அவருக்கு எதிரான அரசியல் போராட்டத்தை நடத்தவேண்டிய அசாதாரணமான சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்திலும் அவர் ஜோகூர் பாருவில் வென்று காட்டி, மகாதீரின் மூக்கை உடைப்பாரா, அல்லது இந்த முறை ஷாரிரை ஜோகூரில் தனது பக்காத்தான் கூட்டணி மூலம் தோற்கடித்து மகாதீர் பழிதீர்த்துக் கொள்ளப் போகிறாரா?

சகோதரர்கள்தான் – ஆனால் அரசியலில் எதிரணிகள் – ஷாரிர்,காலிட்…

ஷாரிருக்கு இன்னொரு சுவாரசியப் பின்னணியும் உண்டு.

பாஸ் கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து ஷா ஆலாம் நாடாளுமன்றத் தொகுதியில் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற காலிட் சாமாட், ஷாரிரின் இளைய சகோதரராவார். தற்போது பாஸ் கட்சியிலிருந்து விலகி அமானா கட்சியில் இணைந்திருக்கிறார் காலிட் சாமாட்.

அண்ணன் அம்னோ-தேசிய முன்னணி எனத் தீவிரமாக இயங்க, தம்பியோ அமானா – பக்காத்தான் என எதிரும் புதிருமாக அரசியலில் செயல்பட்டு வருகின்றனர். இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அண்ணன் – தம்பி இருவரும் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் சூழ்நிலை வரலாம்.

-இரா.முத்தரசன்