Home நாடு “பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களுக்கு 4 பில்லியன் ரிங்கிட்” மகாதீர் அறிவித்தார்

“பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களுக்கு 4 பில்லியன் ரிங்கிட்” மகாதீர் அறிவித்தார்

1174
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் இந்தியர்களுக்குத் தாங்கள் வழங்கப் போகும் திட்டங்கள் குறித்த பிரத்தியேக தேர்தல் அறிக்கையை பக்காத்தான் கூட்டணி சார்பில் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர், 4 பில்லியன் ரிங்கிட் (4 ஆயிரம் மில்லியன்) நிதி ஒதுக்கீட்டின் வழி இந்திய சமுதாயத்திற்கு பொருளாதார மேம்பாடுகள் கொண்டுவரப்படும் என அறிவித்தார்.

இந்த நிதி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், தனியார் துறையின் பங்களிப்பின் மூலமும் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியர்களின் ஏழ்மை நிலைமை மாற்றி அமைக்க அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் மகாதீர் தெரிவித்தார். இந்தியர்கள் வணிகம் செய்யவும் அதற்கான முதலீடுகளை அவர்கள் சுலபமாகப் பெறவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

#TamilSchoolmychoice

“இந்தியர்கள் கணக்குகளில் கெட்டிக்காரர்கள். இந்தியாவில் பல கணக்கு மேதைகள் இருந்திருக்கிறார்கள். பல்வேறு கணக்கு தொடர்பான சிக்கலான விவகாரங்களுக்கு இந்தியாவின் நிபுணர்கள் தீர்வு கண்டிருக்கிறார்கள். எனவே, மலேசிய இந்தியர்களும் கணிதம், விஞ்ஞானம், பொறியியில் ஆகிய துறைகளில் கல்வி பயில்வதற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும்” என்றும் மகாதீர் பலத்த கரவொலிக்கிடையில் அறிவித்தார்.

இந்திய சமுதாயத்திற்கென பக்காத்தான் ஆட்சியில் வழங்கப் போகும் திட்டங்கள் என்ன என்பது குறித்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நேற்றைய நிகழ்ச்சியில் பக்காத்தானின் இந்தியத் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசா, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பக்காத்தானின் முக்கியத் தலைவர்கள் உட்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்றையக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், பக்காத்தானின் வியூகப் பங்காளிக் கட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும், மீரா நியூ ஜென் கட்சியின் தலைவர் ஏ.இராஜரத்தினம், ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பக்காத்தான் கூட்டணியின் இந்தியத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோருடன் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, எம்.குலசேகரன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

‘சிங்கப்பூரின் சிண்டா’ பாணியில் இந்தியர்களுக்கான நல உதவிகள்

பக்காத்தான் ஆட்சி அமைத்ததும், உடனடியாக முதல் கட்டமாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்த மகாதீர், சிங்கப்பூர் நாட்டின் இந்திய சமுதாயத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட ‘சிண்டா’ (SINDA- Singapore Indian Development Association) எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு அமைப்பு போன்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டார்.

அதே வேளையில் நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி அமைக்கப்படும் என்றும் மகாதீர் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.